புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் என்.ஆர். காங்கிரஸ் - பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் நிறுவனரும், தலைவருமான ரங்கசாமி முதலமைச்சராகப் பதவி வகித்து வருகிறார். சட்டப்பேரவையில் என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு 10 உறுப்பினர்கள், பா.ஜ.க.வுக்கு 9 உறுப்பினர்கள், தி.மு.க.வுக்கு 6 உறுப்பினர்கள், காங்கிரஸ் கட்சிக்கு 2 உறுப்பினர்கள், 6 சுயேச்சை உறுப்பினர்கள் என மொத்தம் 33 உறுப்பினர்கள் உள்ளனர். புதுச்சேரியில் அடுத்த ஆண்டு 2026இல் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை எதிர்கொள்ளும் வகையில் அரசியல் கட்சிகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன.

Advertisment

இந்த நிலையில், அமைச்சர்கள் தொந்தரவு செய்வதாக பெண் எம்.எல்.ஏ சந்திர பிரியங்கா பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். என்.ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சந்திர பிரியங்கா வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது, “அப்பா அரசியலில் இருந்தார் அதை வைத்து நானும் அரசியலில் வந்தேன் என பொதுவாக அரசியலுக்கு வந்தப்போது நிறைய பேர் சொன்னாங்க அரசியல் பிடிச்சிருந்துச்சு அதனால அரசியலுக்கு வந்தோம். அதெல்லாம் தாண்டி மக்களுக்கும் நம்மள பிடிக்கணும், பிடிக்கிற மாதிரி ஏதோ ஒரு வேலை செய்யணும். அப்போது மட்டும்தான் மக்கள் நம்மை ஏத்துப்பாங்க. யாராலையும் எந்த பின்புலத்தை வைத்தும் புதுச்சேரியை பொறுத்தவரைக்கும் அரசியலுக்கு வர முடியாது. 

மக்களுக்கு இடையூறு செய்கிற இடங்களில் பேனர் வைக்கக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. அதை நாங்கள் மதிக்கிறோம். அதையும் தாண்டி நம்மை பிடிப்பவர்கள் நமது பிறந்தநாள் விழா போன்ற விழாவுக்கு வைப்பார்கள். அதை ஓரளவுக்கு மேல் நம்மால் சொல்ல முடியாது. நீதிமன்றத்தின் உத்தரவை மதித்து பேனரை எடுக்கிறோம். இந்த நிலையில், ஒரு வாரத்திற்கு முன்பு ஒரு சம்மன் வந்தது. அதில் பேனர்களை வைத்ததற்கு எஸ்.பி, எஸ்.எஸ்.பி, எஸ்.ஐ, இன்ஸ்பெக்டர் இந்த மாதிரி அரசு அதிகாரிகள் எல்லாம் பதில் சொல்ல வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. கடைசியா என்னுடைய படம் ஒரு பேனரில் இருந்ததால் நானும் பதில் சொல்ல வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. அந்த சம்மனை ஒரு சாமானிய மனிதன் தான் அனுப்பியிருக்கிறார். குடும்பத்தை நடத்துவதற்கே கஷ்டப்படுபவர், நீதிமன்றத்திற்கு செல்வதென்றால் எவ்வளவு செலவாகும் என்பதை பாருங்கள். அவர் யார் என்பதை விசாரிக்கும் போது அவருக்கு பின்னாடி ஒரு அமைச்சர் இருக்கிறார் என்பது தெரிந்தது.

மக்கள் நம்மை தேர்ந்தெடுத்துக்கிறார்கள் என்று எண்ணி இந்த பிரச்சனையே வேண்டாம் என்று நம்முடைய வேலையை மட்டும் பார்ப்போம் என ஒதுங்கி வருகிறோம். தன்னுடைய கட்டுப்பாட்டில் வரவில்லை என்றால் ஒரு பெண்ணை எவ்வளவு டார்ச்சர் பண்ணுவாங்க என்பது தான் இதன் எடுத்துக்காட்டு. கொஞ்ச நாளாக பயங்கரமாக டார்ச்சரை அனுபவிக்கிறேன். நான் அமைச்சராக இருந்தபோது எவ்வளவு பிரச்சனை தந்தார்கள், அதையெல்லாம் எதையும் வெளிக்காட்டிக்காமல் ரொம்ப நாசுக்கா வெளியே வந்தேன். இன்னைக்கும் அந்த அமைச்சர்கள் அவ்வளவு டார்ச்சர் செய்கிறார்கள். நான் யார் என்று பேர் சொல்ல விரும்பவில்லை. எல்லோரையும் தவறாக சொல்ல முடியாது. ஒரு ஆளு, இரண்டு ஆளு என்று வைத்துக்கொள்ளுங்கள்.

Advertisment

வீட்டுக்கு போகிற வரைக்கும் என்னை நோட்டமிடுவது, காலையில் இருந்து ஒரு உளவாளி எல்லாம் என்னை சுத்திக்கிட்டே இருக்கும். இதுயெல்லாம் எனக்கு தெரியும். நான் பாதுகாப்பான இடத்தில் இல்லை என்பதும் தெரியும். இதையும் தாண்டி, இதை பற்றி புகார் அளிக்க போனால் ஒரு உயர் அதிகாரி அலட்சியமாகப் பேசுகிறார். ஒரு எம்.எல்.ஏவுக்கே இந்த மாதிரி நடந்தால் ஒரு சாமானிய மனிதனுக்கு என்ன நடக்கும்?. இதையெல்லாம் தாண்டி வாழ்ந்துக்கிட்டு இருக்கேன். நீங்க எவ்வளவு செய்தாலும் என்னை பெரிதாக பாதிக்காது. எல்லாவற்றுக்கும் துணிந்து தான் அரசியலுக்கு வந்திருக்கிறேன். உங்கள் பெயர்களை இதுவரைக்கும் சொல்லாமல் இருப்பதற்கான காரணம் என்னுடைய முதல்வர் மட்டும் தான். ஆனால், திருப்பி திருப்பி தொந்தரவு செய்யும் போது எனக்கு எதுவும் தெரியாது என்பதை நினைக்கக் கூடாது என்பதற்கு தான் இந்த வீடியோ.

ஒரே ஒருத்தருக்காக மட்டும்தான் இவ்வளவு பேசிட்டு அந்த வார்த்தையை கூட சொல்லாம போறேன். அது எங்க ஐயா என்.ஆர் ஐயாக்காக மட்டும்தான்.அவருக்காகதான் நிறைய பொறுத்து போயிட்டு இருக்கேன். பாவம் அவரே நிறைய பொறுத்து போயிட்டுதான் இருக்காரு. எல்லாம் கொஞ்சம் மைண்ட்ல வச்சிட்டு அமைச்சர்கள் கொஞ்சம் அமைதியா இருங்கள். தேர்தலுக்கு இன்னும் எட்டு மாசம்தான் இருக்கு. கொஞ்சம் மக்களுக்கு இப்பயாவது போய் நல்லபடியா செஞ்சுட்டு வேலையை பாருங்க. என்னையும் வேலை பார்க்க விடுங்க. என்ன நம்பி நிறைய பேர் இருக்காங்க.நான் ஒரே பொண்ணுதான். நம்மளுக்கு குடும்பம் என்றால், நம்ம அரசியல் சார்ந்து இருக்கறவங்கதான். அவங்கள பார்த்துக்கிறது என்னோட கடமை. அதெல்லாம் பார்த்துக்கணும் கொஞ்சம் ஃப்ரீயா விடுங்க. 

இதுக்கு மேலயும் நான் இப்படிதான் பண்ணுவேன்னு இருந்தீங்கன்னாபொம்பளைங்கறதுனால எல்லாம் பார்க்காதீங்க. எல்லா தொகுதியிலையும் பொம்பளைங்க வாக்கு அதிகம். பெண்களுக்கு நல்லாவே தெரியும். இப்ப நான் பேசும்போது கூட நிறைய பெண்கள் நான் யாரை பேசுகிறேன் என கண்டுபிடிச்சிருப்பாங்க. அவ்வளவுதான் நீங்களும் வாழுங்க, என்னையும் வாழ விடுங்க” என்று கூறினார்.