puducherry Female IPS officer transferred to Delhi who scolded TVK N. Anand
தவெக பொதுச் செயலாலர் என்.ஆனந்த கடிந்து கொண்ட புதுச்சேரி பெண் ஐபிஎஸ் அதிகாரி டெல்லிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
புதுச்சேரியில் உள்ள உப்பளம் மைதானத்தில் கடந்தாண்டு டிசம்பர் 9ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நடத்தும் புதுச்சேரி மாநில மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
அந்த நிகழ்ச்சிக்கு புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த, QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு வைத்திருக்கும் 5 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்தனர். ஆனால், நிகழ்ச்சிக்கு போதிய கூட்டம் சேராததால், QR குறியீடு அனுமதிச் சீட்டு இல்லாதவர்களையும் அனுமதிக்கக் கோரி, தவெகவின் பொதுச் செயலாளர் என். ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள், காவல்துறை முதுநிலை கண்காணிப்பாளர் ஈஷா சிங்கிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த பெண் காவல் அதிகாரி ஈஷா சிங், “உங்களால் ஏற்கெனவே நிறைய பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இனி யாரேனும் உயிர் இழந்தால் நாங்கள்தான் பொறுப்பேற்க வேண்டியிருக்கும். காவல்துறை என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள் சொல்ல வேண்டியதில்லை” என என். ஆனந்தைக் கடுமையாக எச்சரித்தார். அதன்பின் அங்கிருந்த நிர்வாகிகள் அதிகாரியிடம் மன்னிப்புக் கேட்டனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலானது.
பொதுக்கூட்டத்துக்கு பாஸ் இல்லாதவர்களுக்கு அனுமதி இல்லை என்று தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்திடம் கறார் காட்டியதால் ஐபிஎஸ் அதிகாரியான ஈஷா சிங் பிரபலமானார். மேலும், தவெக பொதுக்கூட்டத்தை சிறப்பாக வழி நடத்தியதற்காக ஈஷா சிங்கிற்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுக்கள் குவிந்தன. இந்த நிலையில், புதுச்சேரியில் ஈஷா சிங் உள்பட இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகளை டெல்லிக்கு இடமாற்றம் செய்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
Follow Us