புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் என்.ஆர். காங்கிரஸ் - பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் நிறுவனரும், தலைவருமான ரங்கசாமி முதலமைச்சராகப் பதவி வகித்து வருகிறார். சட்டப்பேரவையில் என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு 10 உறுப்பினர்கள், பா.ஜ.க.வுக்கு 9 உறுப்பினர்கள், தி.மு.க.வுக்கு 6 உறுப்பினர்கள், காங்கிரஸ் கட்சிக்கு 2 உறுப்பினர்கள், 6 சுயேச்சை உறுப்பினர்கள் என மொத்தம் 33 உறுப்பினர்கள் உள்ளனர். புதுச்சேரியில் அடுத்த ஆண்டு 2026இல் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை எதிர்கொள்ளும் வகையில் அரசியல் கட்சிகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன.
இத்தகைய சூழலில் தான் புதுச்சேரியில் பா.ஜ.க மாநிலத் தலைவர் பதவிக்கு புதியதாக ஒருவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் நாளை (29-06-25) நடைபெறவுள்ள நிலையில், 3 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்தனர். அதனை தொடர்ந்து, புதுச்சேரி ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்த பா.ஜ.கவைச் சேர்ந்தவரான சாய் சரவணக்குமார் நேற்று ராஜினாமா செய்தார். கட்சித் தலைமைக் கேட்டுக் கொண்டதற்காக தனது பதவியை ராஜினாமா செய்ததாக அவர் தெரிவித்திருந்தார்.
பா.ஜ.க அமைச்சர் சாய் சரவணக்குமார் ராஜினாமா செய்த நிலையில், அந்த இடத்துக்கு புதிய அமைச்சரை பரிந்துரைப்பதற்காக ஆளுநர் மாளிகையில் துணைநிலை ஆளுநர் கைலாசநாதனை இன்று (28-06-25) புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி சந்தித்துப் பேசினார். அதன் பின்னர், புதிய அமைச்சர் தொடர்பான பரிந்துரையை வழங்கினார். இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, “பா.ஜ.கவை சேர்ந்தவர் ராஜினாமா செய்த நிலையில், அக்கட்சியைச் சேர்ந்தவருக்கே மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படும். விரைவில் ஆளுநர் மாளிகையில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்” என்று கூறினார்.