பெங்களூரு ஏசி கோஸ்ட் பகுதியைச் சேர்ந்தவர் விஜய். இவரது மனைவி சோனியா, இந்த தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள்  தனது உறவினர் சஞ்சய் மற்றும் அவரது மனைவி சந்தியா ஆகியோருடன் பெருங்களூரிலிருந்து புதுச்சேரிக்கு சுற்றுலா வந்துள்ளனர். வீராம்பட்டினம் பகுதியில் விடுதி ஒன்றில் தங்கி இருந்துள்ளனர். 

Advertisment

இந்த நிலையில் இன்று காலை வீராம்பட்டினம் கடல் பகுதியில் அப்பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்பரின் படகில் குடும்பத்தினர் எட்டு பேராக கடலில் பயணம் செய்துள்ளனர்.  அப்போது எழுந்த ராட்சத அலை காரணமாக சின்ன வீராம்பட்டினம் பகுதியில் படகு கவிழ்ந்திருக்கிறது. இதனைக் கண்ட மீனவர்கள் மீன்பிடி படகு மூலம் கவிழ்ந்த படகை திருப்பி, கடலில் விழுந்தவர்களை மீட்டு கடற்கரைக்கு கொண்டு வந்தனர். இதில் படகில் பயணம் செய்த சோனியா கடலில் மூழ்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரிய வந்தது. 

Advertisment

இதுகுறித்து அப்பகுதி மக்கள் அரியாங்குப்பம் காவல் நிலையத்திற்கு அளித்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சோனியாவின் உடலை கைப்பற்றி மற்ற ஏழு பேரையும் மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.  இதில் இரண்டு பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்ற 5 பேருக்கு லேசான பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.  தொடர்ந்து போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் உரிய உரிமம் இன்றி  சுற்றுலா பயணிகளை கொண்டு படகுகள் இயக்கப்படுவதால் இது போன்ற விபத்துக்கள் ஏற்படுகிறது என்றும் இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் சுற்றுலாத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.