Advertisment

'நான்கு நாட்களில் இணையத்தில் வெளியிடுங்கள்'-தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

a4857

'Publish it online within four days' - Supreme Court orders Election Commission Photograph: (supreme court)

பீகார் மாநிலத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதாவது இந்த திருத்தத்தின்படி, 2003 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலில் இடம்பெறாத அனைவரும் தங்கள் பிறந்த தேதி, பிறந்த இடம் ஆகியவற்றுக்கான சான்றுகளை அளிக்க வேண்டும் எனவும், இவர்களில் 1981 ஜூலை 1க்குப் பிறகு பிறந்தவர்கள் தங்களுடைய பெற்றோரின் பிறப்பிடம் சார்ந்த சான்றுகளை வழங்க வேண்டும் என்றும் இந்த சான்றிதழ்கள் இல்லாதோர் வாக்களிக்க தகுதியில்லாதவர்களாக அறிவிக்கப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டு தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இதற்கு இந்தியா கூட்டணி அடங்கிய எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

இதற்கிடையில் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையின் முதல் கட்டமாக மொத்தம் 65.2 லட்சம் வாக்காளர்களின் பெயர்களை தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது. நீக்கப்பட்ட வாக்காளர்களில் 22 லட்சம் பேர் இறந்துவிட்டதாகவும், 35 லட்சம் பேர் நிரந்தமாக வேறு மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்து விட்டதாகவும், 7 லட்சம் பேர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்காளர்களாக சேர்க்கப்பட்டுள்ளதாகவும், 1.2 லட்சம் பேர் இன்னும் தங்கள் படிவங்களை சமர்பிக்கவில்லை என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு இந்தியா கூட்டணி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

பீகாரில் வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் அளிக்கப்பட்டது. அந்த மனுவில், ‘சிறப்பு தீவிர திருத்தத்தில் ஆதார், ரேஷன் அட்டை உள்ளிட்ட எந்த ஆவணங்களையும் ஆணையம் ஏற்கவில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனுக்கள் மீதான விசாரணை கடந்த 12 ஆம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதி சூர்யா காந்த் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், ‘தேர்தல் ஆணையத்தின் செயல்முறை வாக்காளர்களை, குறிப்பாக தேவையான படிவங்களைச் சமர்பிக்க முடியாதவர்களை பெரிய அளவில் விலக்க வழிவகுக்கும். 2003 வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்ட வாக்காளர்களை கூட புதிய படிவங்களை நிரப்ப வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் இருப்பிடத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றாலும் பெயர்கள் நீக்கப்படும். தேர்தல் ஆணையத் தரவுகளின்படி 7.24 கோடி பேர் படிவங்களைச் சமர்பித்துள்ளனர். ஆனால் இறப்புகள் அல்லது இடம்பெயர்வு குறித்து முறையான விசாரணை இல்லாமல் சுமார் 65 லட்சம் பெயர்கள் விலக்கப்பட்டுள்ளனர். அவர்கள் எந்த கணக்கெடுப்பையும் நடத்தவில்லை என்பதை அவர்கள் தங்கள் பிரமாணப் பத்திரத்தில் ஒப்புக்கொள்கிறார்கள்’ எனத் தெரிவித்தார்.

வாதங்களை கேட்ட நீதிபதி சூர்யா காந்த், “குடியுரிமைக்கான இறுதி சான்றாக ஆதார் அட்டையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தேர்தல் ஆணையம் கூறுவது சரியானது. அதை சரிபார்க்க வேண்டும். சரிபார்ப்புப் பயிற்சியை மேற்கொள்ள தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளதா என்பது தான் முதலில் தீர்மானிக்க வேண்டிய கேள்வி. அவர்களுக்கு அதிகாரம் இல்லையென்றால் எல்லாம் முடிந்துவிடும். ஆனால், அவர்களிடம் அதிகாரம் இருந்தால் எந்த பிரச்சனையும் இருக்க முடியாது. நீங்கள் உள்ளூரில் வசிக்கக்கூடியவரா, இல்லையா என்பதை சரிபார்க்க வேண்டியது ஆணையத்தின் வேலை. வாக்காளர் ஒருவர், ஆதார் மற்றும் ரேஷன் கார்டுடன் படிவத்தை சமர்பித்தால், அந்த விவரங்களைச் சரிபார்க்க தேர்தல் ஆணையம் கடமைப்பட்டுள்ளது” என்று கூறியிருந்தார்.

Advertisment

இந்நிலையில் இன்று (14/08/2025) இந்த வழக்கின் விசாரணையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளனர். ''அனைவரும் வாக்காளர் திருத்தப் பட்டியல் விவரங்களை இலகுவாக தெரிந்து கொள்ளும் வகையில் ஏன் இதை இணையதளத்தில் வெளியிடக்கூடாது'' எனக்  கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ''மாவட்ட வாரியாக எத்தனை பேர் நீக்கப்பட்டுள்ளனர்? அவர்கள் யார் யார்? அவர்களில் இறந்தவர்கள், புலம்பெயர்ந்தவர்கள் யார் என்ற காரணத்தை குறிப்பிட்டு பட்டியலை வெளியிட வேண்டும். நீக்கப்பட்டதற்கான காரணத்தையும் இணையதளத்திலேயே தெரிந்து கொள்ளும் வகையில் பட்டியலை  4 நாட்களில் இணையதளத்தில் வெளியிட வேண்டும்'' என உத்தரவிட்டனர்.

நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் விவரங்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதள பக்கத்தில் வெளியிடப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கின் அடுத்த விசாரணையானது வரும் 22 ஆம் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் அனைத்துத் தரவுகளையும் தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

Bihar election commision of india supremecourt
இதையும் படியுங்கள்
Subscribe