தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த நடவடிக்கையைக் கடந்த நவம்பர் மாதம் 4ஆம் தேதி முதல் இந்தியத் தேர்தல் ஆணையம் நடத்தி வருகிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் இன்று (19.12.2025) வெளியிடப்பட்டது. இதற்கான பட்டியலைச் சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு வழங்கினர்.
இதனைத் தொடர்ந்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியும், அரசு செயலாளருமான அர்ச்சனா பட்நாயக் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “எஸ்.ஐ.ஆருக்குப் பிறகு தமிழகத்தில் 15.18% வாக்குகள் நீக்கப்பட்டுள்ளன. அதாவது எஸ்.ஐ.ஆருக்குப் பிறகு தமிழகத்தில் 97.37 லட்சம் வாக்குகள் நீக்கம் செய்யப்பட்ட்டுள்ளனர். எஸ்.ஐ.ஆருக்கு முன்னதாக 6.41 கோடி வாக்காளர்கள் இருந்தனர். தற்போது வாக்காளர்களின் எண்ணிக்கை 5.43 கோடியாக குறைந்துள்ளது” எனத் தெரிவித்தார்.
இந்நிலையில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியான தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதள (https://electoralsearch.eci.gov.in/) பக்கம் சில மணி நேரம் முடங்கியது. தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் அதன் பட்டியலைச் சரிபார்க்க ஒரே நேரத்தில் ஏராளமானோர் முயன்றதால் சர்வர் மற்றும் தொழில்நுட்ப பிரச்சனையால் இணையத்தளம் பக்கம் முடங்கியது. வரைவு வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் இருக்கிறதா என ஒவ்வொரு வாக்காளர்களும் பட்டியலைப் பார்க்க முயன்ற நிலையில் தேர்தல் ஆணையத்தின் இணையதளப்பக்கம் முடங்கியது. அதன் பின்னர் தேர்தல் ஆணையத்தின் இணையதளம் இயல்பு நிலைக்கு வந்தது.
Follow Us