வேலூர், சலவன்பேட்டையைச் சேர்ந்தவர் வடிவேலு (வயது 48), சமூக ஆர்வலர். இவர் வேலூர் பர்மா பஜாரில் ஓட்டல் நடத்தி வந்தார். காயமடைந்த தெரு நாய்களை மீட்டு கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து, உணவு வழங்கி வந்தார். தற்போது, சலவன்பேட்டையிலுள்ள வீட்டை விற்றுவிட்டு, காட்பாடி காந்தி நகர் வள்ளலார் தெருவில் தனது சகோதரர் பிரேம் ஆனந்துடன் வசித்து வருகிறார்.
திருவலம், எஸ்.எல். புதூர் பகுதியைச் சேர்ந்த மஞ்சுளாவின் கட்டிடத்தை வாடகைக்கு எடுத்து, நாய்கள் பராமரிப்பு மையம் நடத்தி வருகிறார். இங்கு, காயமடைந்த, வயது முதிர்ந்த, மற்றும் நோய்வாய்ப்பட்ட தெரு நாய்களை மீட்டு உணவு மற்றும் சிகிச்சை அளித்து வருகிறார். நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சையும் செய்யப்படுகிறது. இதற்காக வடிவேலு முறையான உரிமம் பெற்றுள்ளார். அவரது பராமரிப்பு மையத்தில் தற்போது 25 நாய்கள் உள்ளன.
இதனைக் கண்ட அப்பகுதி மக்கள், நாய்களை அடைத்து வைத்து அவற்றை வெட்டி விற்பனை செய்வதாக சந்தேகித்து, உடனடியாக பராமரிப்பு மையத்தை காலி செய்ய வேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த திருவலம் காவல் நிலைய ஆய்வாளர் தயாளன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு செய்தனர். நாய்க்கறி வெட்டி விற்பனை செய்யப்பட்டதற்கு எந்த ஆதாரமும் இல்லை எனவும், இது வதந்தியாகப் பரவியுள்ளது எனவும் தெரிவித்தனர்.
இதுகுறித்து விசாரணை நடத்த, காட்பாடி தாசில்தார், பிராணிகள் வதை தடுப்பு சங்கம், மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் முறையாக விசாரணை நடத்திய பிறகு, முழுமையான விவரங்கள் தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.