Public seizes 100 trucks of over-deep sand quarry Photograph: (lorry)
அரசு சவுடுமண் குவாரிக்கு எதிராக பொதுமக்கள் லாரிகளை சிறைபிடித்து போராட்டம் நடத்தியதால் திருவள்ளூரில் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் பட்டறை பெருமந்தூர் பகுதியில் ஏரியில் அரசின் சவுடுமண் குவாரி அமைந்துள்ளது. பூந்தமல்லியை சேர்ந்த ஆரோக்கியதாஸ் என்பவர் அரிசிடம் அனுமதி பெற்று இந்த குவாரியை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த நான்கு தினங்களாகவே அரசு கொடுத்த அனுமதியைத் தாண்டி சவுடுமண் தோண்டப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.
45 நாட்களில் 2000 லோடு மண் அல்ல அனுமதி அளித்துள்ள நிலையில், இதுவரை நாள் ஒன்றுக்கு ஆயிரம் லோடு என ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மண் லோடுகள் எடுக்கப்பட்டதாக அந்த பகுதி மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். இதனால் நிலத்தடி நீர் பாதிக்கப்படும், கால்நடைகள் மேய்ச்சல் இல்லாமல் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என தெரிவித்துள்ளதோடு, மண் ஏற்றிச் செல்லும் லாரிகள் வேகக் கட்டுப்பாடில்லாமல் செல்வது அச்சத்தை கொடுப்பதாக தெரிவித்து சென்னை- திருப்பதி நெடுஞ்சாலையில் சவுடுமண் ஏற்றிச்சென்ற சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகள் சிறைபிடித்தனர். மண் ஏற்றிக்கொண்டு வந்த லாரிகள் மட்டுமல்லாது மண்ணை ஏற்றுவதற்கு குவாரி நோக்கி வந்த எம்டி லாரிகளும் தடுத்து நிறுத்தப்பட்டது. இதனால் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.