புதுக்கோட்டை - மீமிசல் பிரதான சாலை, இரவு பகல் என எப்போதும் வாகனப் போக்குவரத்து நிறைந்த பகுதியாக உள்ளது. இந்தச் சாலையில் அறந்தாங்கி அருகே உள்ள எரிச்சி ஒத்தக்கடை கடைவீதி, அடிக்கடி விபத்துகள் நடக்கும் இடமாகவும் அறியப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு, இந்தக் கடைவீதியில் மதுபோதையில் இருந்த ஐந்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள், கடைகளில் இருந்த பதாகைகள், கட்டில்கள், வழிகாட்டி பலகைகள் உள்ளிட்ட பொருட்களை சாலையில் இழுத்து வந்து உடைத்து அட்டூழியத்தில் ஈடுபட்டனர்.

“ஒத்தக்கடைன்னா நாங்கதான்...’ எனக் கூறி அட்டகாசத்தில் ஈடுபட்ட இளைஞர்கள், உயர்கோபுர மின்கம்பத்தில் ஏறி ஆபத்தான செயல்களில் ஈடுபட்டதோடு, அந்த வழியாகச் சென்ற வாகனங்களை நிறுத்தி ரகளையில் ஈடுபட்டனர். மேலும், தங்கள் மோட்டார் சைக்கிள்களை சாலையில் நிறுத்தி கேக் வெட்டும் நிகழ்வையும் நடத்தியுள்ளனர். இந்த அட்டூழியங்களை அவர்களில் ஒருவர் வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ வைரலாகப் பரவியதைத் தொடர்ந்து, இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “மது போதைக்கு அடிமையான இளைஞர்கள் சமீபகாலமாக அறந்தாங்கிப் பகுதியில் தாராளமாக கிடைக்கும் கஞ்சா போன்ற மாற்றுப் போதை பொருட்களுக்கு அடிமையாகி தன்னிலை மறந்து இப்படி விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் ரகளை செய்யும் இளைஞர்களை எதிர்த்து கேட்கமுடியாமல் கடைகாரர்கள் தவிக்கின்றனர். ஆதரவற்றோர் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள  வழிகாட்டி பதாகையை கூட உடைக்கிறார்கள் என்றால் அவர்கள் போதையில் எந்த நிலையில் இருந்திருப்பார்கள் என்று தெரியவில்லை. இதனால், வாகன ஓட்டிகள் பயந்து வாகனங்களை ஓரமாக ஓட்டும்போது விபத்துகளும் ஏற்படுகின்றன. காவல்துறையினர் இந்த இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு இவர்களுக்கு எங்கிருந்து போதைப் பொருள் கிடைக்கிறது என்பதை விசாரித்து, கஞ்சா போன்ற போதைப் பொருள் விற்பனையாளர்களையும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” வலியுறுத்தியுள்ளனர்.

இந்த வைரல் வீடியோவை அடிப்படையாகக் கொண்டு, அறந்தாங்கி காவல்துறையினர் ஒத்தக்கடை கடைவீதியில் அட்டகாசத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் போதைப் பொருட்களின் பயன்பாடு மற்றும் அவற்றுக்கு அடிமையாகுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், சமூகக் குற்றங்கள் பெருகி வருவதாக குற்றம்சாட்டபடுகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், அவ்வப்போது சம்பவங்களும் நடந்து கொண்டிருக்கின்றன. அதே சமயம், “போதை இல்லா தமிழகம்” என்ற பெயரில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், போதைப் பொருட்களின் பயன்பாடு மற்றும் விற்பனையை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றே தெரிகிறது. எனவே, போதைப் பொருள் விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கி, வருங்கால இளைய தலைமுறையின் வாழ்க்கையைப் பாதுகாக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.