ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள பொதுமக்கள் போர்வெல் மூலம் குடிநீர் சேவையை பூர்த்தி செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக போர்வெல்லில் தண்ணீர் வற்ற தொடங்கியதால் முறையாக குடிநீர் கிடைக்காமல் இப்பகுதி மக்கள் அவதி அடைந்து வந்தனர்.கடந்த சில நாட்களாகவே தண்ணீர் கிடைக்காமல் மக்கள் அவதி அடைந்து வந்தனர். இது குறித்து புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதையடுத்து இன்று காலை கல் கடம்பூர் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் கடம்பூர் -சக்தி மலைப்பகுதியில் திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சத்தியமங்கலம் துணை மண்டல அதிகாரி செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது கல் கடம்பூர் பகுதி சேர்ந்த பொதுமக்கள் கூறும் போது, 'எங்கள் பகுதியில் போர்வெல் மூலம் குடிநீர் தேவை பூர்த்தி செய்து வந்தோம். தற்போது போர்வெல்லில் தண்ணீர் வற்ற தொடங்கி விட்டது. இதனால் குடிநீர் கிடைக்காமல் அவதி அடைந்து வருகிறோம். எனவே எங்கள் பகுதிக்கு புதிய போர்வெல் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். அதற்குப் பதில் அளித்த அதிகாரிகள், உங்கள் கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை அடுத்து பொதுமக்கள் தங்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.