Public blockades road with empty jugs Photograph: (erode)
ஈரோடு மாவட்டம் நல்லூர் பகுதியில் உள்ள பத்துக்கு மேற்பட்ட கிராமங்களுக்கு பவானிசாகரில் இருந்து செயல்படுத்தப்படும் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் சமீப காலமாக நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் சரிவர குடிநீர் விநியோகம் இல்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்து வந்தனர்.
ஊராட்சி நிர்வாகத்திடம் இதுதொடர்பாக பலமுறை கோரிக்கை வைத்தும் எந்தவித வடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நல்லூர் பகுதியைச் சேர்ந்த கிராமமக்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கோவை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் காலிக் குடங்களுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக அங்கு வந்த போலீசார் மற்றும் பவானிசாகர் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
குடிநீரை சீராக விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டனர். போராட்டத்தின் காரணமாக அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பேருந்துகள் மற்றும் லாரிகள் என வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.