Public besieges minister Photograph: (dmk)
'உங்களுடன் ஸ்டாலின்' முகாமை பார்வையிட வந்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனை சூழ்ந்துகொண்ட மக்கள் தங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை எனக் கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இன்று 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமானது நடைபெற்றது. இதில் தங்களுடைய பிரச்சனைகள் குறித்து மனு அளிப்பதற்காக மக்கள் குவிந்திருந்தனர். அப்பொழுது திடீரென நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் முகாமை பார்வையிட வந்திருந்தார். அப்போது முள்ளிப்பாளையம் பாறைமேடு வீராசாமி தெருவைச் சேர்ந்த பெண்கள் மற்றும் அப்பகுதி மக்கள் அமைச்சரை முற்றுகையிட்டனர். 'அந்த பகுதியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறோம். சாலை வசதி இல்லை, சாக்கடை வசதி இல்லை. எந்த அடிப்படை வசதியும் இல்லை. மழைக்காலங்களில் எங்கள் பகுதியில் தண்ணீர் தேங்குகிறது. இதனால் நாங்கள் பெரிதும் அவதிக்குள்ளாகிறோம். சில நேரங்களில் மழைநீரோடு கழிவுநீர் சேர்ந்து வீட்டுக்குள் புகுந்து கொள்கிறது. இதுதொடர்பாக புகார் அளித்தும் மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்கவில்லை' என தங்களுடைய குறைகளை வெளிப்படுத்தினர். உங்களுடைய பிரச்சனை தீர்த்து வைக்கப்படும் என அமைச்சர் துரைமுருகன் மக்களிடம் நம்பிக்கை அளித்தார்.