கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மகப்பேறு பிரிவில் பிறந்து நான்கு நாட்களே ஆன ஆண் குழந்தையை கடத்த முயன்ற பெண்ணை, பொதுமக்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் பிடித்து, தர்ம அடி கொடுத்து, காவல்துறையிடம் ஒப்படைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சரவணன் - திவ்யா தம்பதியருக்கு, கடந்த ஆகஸ்ட் 5 அன்று கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. திவ்யாவுடன் அவரது மாமியார் தங்கம்மா மருத்துவமனையில் தங்கியிருந்தார். இந்நிலையில், நேற்று முதல் மருத்துவமனையில் சுற்றித்திரிந்த மர்மப் பெண் ஒருவர், தங்கம்மாவுடன் அருகில் படுத்திருந்தார். ஆகஸ்ட் 9 அதிகாலை 3 மணியளவில், அந்தப் பெண், தங்கம்மாவின் பேரனான பச்சிளங்குழந்தையை கடத்தி, தப்பி ஓட முயன்றார். இதைக் கண்ட தங்கம்மா கூச்சலிட்டதையடுத்து, அருகிலிருந்த பொதுமக்கள் மற்றும் மருத்துவமனையின் துப்புரவுப் பணியாளர்கள், அந்தப் பெண்ணைப் பிடித்து, குழந்தையை மீட்டனர்.

பின்னர், பொதுமக்கள் கூடி அந்தப் பெண்ணுக்கு தர்ம அடி கொடுத்து, காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், அந்தப் பெண்ணை கள்ளக்குறிச்சி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், அந்தப் பெண், பாண்டியன் குப்பம் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமி எனத் தெரியவந்துள்ளது.

இதற்கிடையில், காவல்துறையினர் சம்பவ இடத்தில் விசாரிக்காமல், அந்தப் பெண்ணை நேரடியாக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றதால், உரிய நடவடிக்கை எடுக்கப்படாது என எண்ணிய பொதுமக்கள், மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, காவல் ஆய்வாளர் ராபின்சன், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, குழந்தை கடத்த முயன்ற பெண்ணுக்கு சட்டப்படி தண்டனை பெற்றுத் தரப்படும் என்று உறுதியளித்தார். இதனைத் தொடர்ந்து, பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்தச் சம்பவம், கள்ளக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.