'Providing breakfast and building houses for sanitation workers is welcome' - CPM Shanmugam Photograph: (tngovt)
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில், 21வது அமைச்சரவைக் கூட்டம் இன்று (14.08.2025) நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தூய்மைப் பணியாளர்களுக்கு 6 முக்கிய அறிவிப்புகள் வெளியானது.
அதன்படி, 'தூய்மைப் பணியாளர்கள் குப்பைகளைக் கையாளும் போது அவர்களுக்கு நுரையீரல் மற்றும் தோல் சம்பந்தமான நோய்களால் பாதிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. எனவே இத்தகைய தொழில்சார் நோய்களைக் கண்டறிவதற்கும் சிகிச்சை அளிப்பதற்கும் தேவையான தனித்திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும்.
தூய்மைப் பணியாளர்கள் பணியின் போது இறக்க நேரிட்டால் அவர்களுக்குத் தூய்மை பணியாளர் நலவாரியத்தின் மூலமாக நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. தூய்மை பணியாளர்களுடைய குடும்பங்களினுடைய எதிர்கால நலனையும் வாழ்வாதாரத்தையும் முழுமையாக உறுதி செய்யச் செய்யக்கூடிய வகையில் இந்த நிதி உதவியுடன் கூடுதலாக இந்த பணியாளர்களுக்கு 5 லட்ச ரூபாய் அளவிற்குக் காப்பீடு இலவசமாக வழங்கப்படும். இதனால் பணியின் போது இறக்க நேரிடும் தூய்மை பணியாளர்களின் குடும்பத்திற்கு 10 லட்ச ரூபாய் கிடைத்திட வழிவகை ஏற்படும்.
தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினுடைய சமூக, பொருளாதார நிலையினை உயர்த்திட சுய தொழில் தொடங்கும்போது அத்தொழில் திட்ட மதிப்பீட்டில் 35 விழுக்காடு நிதி அதிகபட்சமாக 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை மானியமாக வழங்கப்படும். மேலும் இந்த கடன் உதவி அதைப் பெற்று தொழில் தொடங்கி கடன் தொகையைத் தவறாமல் திருப்பிச் செலுத்துவதற்கு ஆறு விழுக்காடு வட்டி மானியமும் வழங்கப்படும். இந்த புதிய திட்டத்திற்கு ஆண்டுதோறும் 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
தூய்மைப் பணியாளருடைய குழந்தைகள் எந்த பள்ளியில் பயின்றாலும் அவர்களுக்கு உயர்கல்வி கட்டணச் செலவை மட்டுமின்றி விடுதி கட்டணம் புத்தக கட்டணங்களுக்கான உதவித் தொகையை வழங்கிடும் வகையில் புதிய உயர்கல்வி உதவித்தொகை திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும். நகர்ப்புறங்களில் சொந்த வீடு இல்லாத தூய்மை பணியாளர்களுக்கு வரும் மூன்று ஆண்டுகளில் தூய்மை பணியாளர் நல வாரியத்தினுடைய உதவியோடு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்டங்கள் தூய்மை பணியாளர்கள் வசிக்கும் இடத்திலேயே வீடு கட்டுதல் என பல்வேறு முறைகளின் கீழ் 30 ஆயிரம் குடியிருப்புக்கள் கட்டித்தரப்படும்.
கிராமப் பகுதிகளில் வசிக்கும் தூய்மைப் பணியாளர்களுக்குக் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீட்டில் முன்னுரிமை வழங்கப்படும். தூய்மை பணியாளர்கள் தங்களது பணியை அதிகாலையில் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலையில் காலை உணவு சமைப்பதற்கும் அதை பணிபுரிய இடத்திற்குக் கொண்டு வந்து அருந்துவதற்கும் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர். இப்பிரச்சனைகளுக்குத் தீர்வாக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்குக் காலை உணவு அந்தந்த உள்ளாட்சி அமைப்புக்களால் இலவசமாக வழங்கப்படும். இத்திட்டம் முதற்கட்டமாகப் பெருநகர சென்னை மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டு படிப்படியாக மற்ற நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் விரிவுபடுத்தப்படும்' என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தூய்மைப் பணியாளர்களின் முக்கியக் கோரிக்கையான பணி நிரந்தரம் குறித்து ஆலோசிக்கப்பட்டதா? என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், பணி நிரந்தரம்- தனியார் வசம் விடக் கூடாது என்பது தூய்மைப் பணியாளர்களின் முக்கிய கோரிக்கை. அது குறித்து அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதா என்பது தெரியவில்லை.
இன்றைய அரசின் அறிவிப்பில் தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவு, வீடு கட்டி தருவது, காப்பீடு மூலம் இறந்தால் பத்து லட்சம் ரூபாய், அவர்களின் குழந்தைகளின் கல்விக்கு உதவி போன்ற அறிவிப்புக்கள் வரவேற்கத்தக்கது. ஆனால், மாநிலம் முழுவதும் தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வது குறித்து அரசு முடிவு எடுக்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.