நேபாள நாட்டின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் விதிமுறைகளுக்கு உட்பட்டு அந்நாட்டில் இயங்கும் அனைத்து சமூக வலைத்தள நிறுவனங்களும் பதிவு செய்ய வேண்டும் என அந்நாட்டின் பிரதமர் கே.பி. சர்மா ஒளி தலைமையிலான அரசு உத்தரவிட்டிருந்தது. அந்த வகையில் இந்த உத்தரவை மீறிய ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், யூடியூப் உள்ளிட்ட 26 சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டன. இதற்கு நாடெங்கிலும் இருந்து கடும் எதிர்ப்பு எழுந்தது.

Advertisment

இதன் தொடர்ச்சியாக அங்குப் போராட்டங்கள் நடைபெற்றன. அதாவது இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் நடத்திய  போராட்டமானது அந்நாட்டுத் தலைநகர் காட்மாண்டுவில் உள்ள நாடாளுமன்ற வளாகம் உள்ளிட்ட பல்வேறு இடங்கள் முற்றுகையிடப்பட்டன. அதன் காரணமாக போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியது. அதோடு 100க்கும் மேற்பட்ட நபர்கள் காயமடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியது.

மற்றொருபுறம் நேபாள அரசு இந்தப் போராட்டம் தொடர்பாக அவசர ஆலோசனைகளை நடத்தி வந்தது. இந்நிலையில் இளைஞர்களின் தொடர் போராட்டம் காரணமாக நேபாள அரசு வாட்சப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மீது விதித்திருந்த தடையை நீக்கியுள்ளது.

இது தொடர்பாக நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'சமூக வலைத்தள தடைக்கு எதிரான போராட்டத்தில் நடந்த துயரத்தால் வருத்தம் அடைந்தேன். சுயநலவாதிகள் gen-z  போராட்டத்தில் ஊடுருவியதால் பொதுமக்கள் உயிரிழக்க நேர்ந்துள்ளது. சமூக ஊடகங்களை பயன்படுத்துவதை தடுக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை. வன்முறை காரணமாக ஏற்பட்ட சேதம் குறித்து ஆய்வு செய்ய விசாரணைக் குழு அமைக்கப்படும்' என தெரிவித்துள்ளார்.