பெருநகர சென்னை மாநகராட்சியின் 5 மற்றும் 6வது மண்டலங்களில் மேற்கொள்ள வேண்டிய தூய்மைப் பணிகளை 276 கோடி ரூபாய்க்கு தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கி கடந்த ஜூன் மாதம் 16ஆம் தேதி (16.06.2025) மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்த்து சென்னை மாநகராட்சியின் தலைமை அலுவலகமான ரிப்பன் பில்டிங் அருகில் தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் கடந்த 13 நாட்களாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே இந்த போராட்டம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணையில் அனுமதிக்கப்படாத இடத்தில் போராட்டம் நடத்துவதால் தூய்மைப் பணியாளர்களை அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்துமாறு உத்தரவிட்ட நீதிமன்றம், 'ரிப்பன் மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனவும் தெரிவித்திருந்தது.
உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவைத் தொடர்ந்து தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர் கே.என்.நேரு, அமைச்சர் சேகர்பாபு மற்றும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ஆகியோர் மீண்டும் 8 ஆவது கட்டமாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்களை கைது செய்யும் முனைப்பில் போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர். இன்று மாலை முதலே ரிப்பன் மாளிகை போலீசாரின் முழு கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. இந்தநிலையில் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு பிறகும் போராட்டத்தை தொடர்ந்து தூய்மைப் பணியாளர்கள் நடத்தி வந்த நிலையில் போலீசார் குண்டுகட்டாக தூய்மைப் பணியாளர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கையில் தேசியக் கொடி, கம்யூனிஸ்ட் கொடிகளுடன் இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் ஆண்கள், பெண்கள் என அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் அங்கு உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.