Protest continues for 13th day; Ministers resume talks Photograph: (chennai corporation)
பெருநகர சென்னை மாநகராட்சியின் 5 மற்றும் 6வது மண்டலங்களில் மேற்கொள்ள வேண்டிய தூய்மைப் பணிகளை 276 கோடி ரூபாய்க்கு தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கி கடந்த ஜூன் மாதம் 16ஆம் தேதி (16.06.2025) மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்த்து சென்னை மாநகராட்சியின் தலைமை அலுவலகமான ரிப்பன் பில்டிங் அருகில் தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் கடந்த 13 நாட்களாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே இந்த போராட்டம் தொடர்பாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் 3 வழக்குகள் தொடரப்பட்டது. இவ்வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் இன்று (13.08.2025) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “அனுமதிக்கப்படாத இடத்தில் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது” எனத் தெரிவித்தார்.
அதற்குத் தூய்மைப் பணியாளர்கள் தரப்பில் வாதிடுகையில், “2 நாட்களில் இந்த பிரச்சனைக்குத் தீர்வு ஏற்பட்டுவிடும் என்பதால் இந்த வழக்கை வரும் 19ஆம் தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும்” எனக் கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்குத் தலைமை நீதிபதி, “இந்த கோரிக்கையை ஏற்க முடியாது. ஏனென்றால் அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டும் தான் போராட்டம் நடத்த முடியும். எனவே அனுமதிக்கப்படாத இடத்தில் போராட்டம் நடத்துவதால் தூய்மைப் பணியாளர்களை அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்துமாறு உத்தரவிடப்படுகிறது. அதோடு ரிப்பன் மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவைத் தொடர்ந்து 13 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர் கே.என்.நேரு, அமைச்சர் சேகர்பாபு மற்றும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ஆகியோர் மீண்டும் 8 ஆவது கட்டமாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை ரிப்பன் மாளிகையில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.