புதுக்கோட்டையில் கோவில் கோபுரத்தின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நபர் திடீரென தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Advertisment

புதுக்கோட்டை கொடும்பாளூர் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஆறுமுகம். இவர் விராலிமலையில் உள்ள கோவில் கோபுரத்தின் மீது ஏறி மயில்களுக்கு சரணாலயம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். இதுகுறித்து அந்த பகுதி மக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

Advertisment

அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் கோவில் கோபுரத்தின் மீது அமர்ந்திருந்த சமூக ஆர்வலர் ஆறுமுகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி கீழே இறங்க வலியுறுத்தினர். இருப்பினும் கேட்காமல் ஆறுமுகம் கோபுரத்தின் உச்சியிலேயே அமர்ந்திருந்தார். அவரை மீட்பதற்காக மீட்புப் படையினர் மேலே சென்ற பொழுது திடீரென கால் இடறி கீழே விழுந்த ஆறுமுகம் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார். பின்னர் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி தற்பொழுது அவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசாரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.