'தமிழகத்தை கபளீகரம் செய்ய வேண்டும் என்ற பாஜகவின் முயற்சிகள் மண்ணோடு மண்ணாக தவிடு பொடியாகும்' என வைகோ தெரிவித்துள்ளார்.

திருச்சியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும், மதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோவும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது வைகோ பேசுகையில், ''திமுகவுடன் கூட்டணிகள் வைப்பத்தில் அதிருப்தி என எந்த மதிமுக நிர்வாகியும் தெரிவிக்கவில்லை. திமுக மெஜாரிட்டி பெற்று வெற்றி பெறும். கூட்டணி அரசு என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல் போய்விடும். நான் கூட்டணி அரசு வரவேண்டும் என்று விரும்புவதில்லை. தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளவும் மாட்டார்கள். முதல்வர் ஸ்டாலின் திராவிட மாடல் அரசைத் தொடர்ந்து நடத்துவார். அந்த மாபெரும் வெற்றிக்கு நாம் உறுதுணையாக இருப்போம்.

திராவிடம் காக்கப் பாடுபடுவது தான் நம் இயக்கத்தின் எதிர்காலத்தின் கடமை என்று சொல்லித்தான் உயர்நிலைக் குழு, பொதுக்குழு, நிர்வாக குழுவில் முடிவு எடுத்து திமுகவுடன் கூட்டணி வைத்தோம். இந்தத்துவா சக்திகள், சனாதன சக்திகள் தமிழகத்தை கபளீகரம் செய்ய வேண்டும் என்றும் முனைந்து திட்டமிட்டு அமித்ஷாவும், பிரதமர் மோடியும், பாஜகவின் முன்னணி தலைவர்களும், தமிழ்நாட்டில் இருப்போரும் அதற்கு கடுமையாக முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். 

அந்த முயற்சிகள் மண்ணோடு மண்ணாக தவிடு பொடியாகும். இது தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞரின் பூமி. திராவிட இயக்க பூமி. இந்த பூமியில் கொட்டப்பட்ட வியர்வை திராவிட இயக்க தோழர்களின் ரத்தத்தில் இருந்து வந்த வியர்வை. ஆகவே திராவிட இயக்கம் தான் என் நாடி நரம்புகளில் ஓடுகின்ற உணர்ச்சியாகும். நான் 1964 ஆகஸ்ட் 21 அன்று பேரறிஞர் அண்ணா முன்னிலையில் பேசிவிட்டு திமுகவில் இணைந்தவன். இந்தி எதிர்ப்பு போராட்டக் களத்தில் விருதுநகர் சீனிவாசனுக்கும் அண்ணன் எல்.கணேசனுக்கும் தூதுவனாகவும் அவர்கள் நினைப்பதை செய்து முடிப்பவனாகவும் அந்த போராட்ட களத்தில் இருந்தவன். அரசியல் சட்டத்தை தலைவர் சொல்லியும் மீறி எரித்தவன். அதேபோல் நாடாளுமன்றத்தில் இந்தி எதிர்ப்பிற்கான தீர்மானங்களை கொண்டு வந்தவன்'' என்றார்.