சிதம்பரம் வல்லம்படுகை மெயின் ரோட்டில் வசிக்கும் நவீன் மீது, அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் சுமார் 20 கிலோ கஞ்சா வழக்கு பதியப்பட்டிருந்தது. இந்நிலையில், 22 ஆம் தேதி மற்றொரு கஞ்சா வழக்கில் நவீனை அண்ணாமலை நகர் போலீசார் கைது செய்தனர். அப்போது கைது செய்த காவலர்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டியிருக்கிறார். பின்னர் அந்தக் கத்தியை ஒரு இடத்தில் தூக்கி எறிந்துள்ளார்.
இந்நிலையில் இன்று காலை அந்தக் கத்தியை எடுக்க சிதம்பரம் மாரியப்பா நகர் தென்புறமுள்ள முட்புதருக்குள் சென்ற போது, திடீரென காவலர் அய்யப்பனைத் தான் மறைத்து வைத்திருந்த மற்றொரு கத்தியால் நவீன் வெட்டியுள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த காவல் ஆய்வாளர் அம்பேத்கர் எச்சரிக்கை செய்தார். ஆனால் அதனைக் கேட்காமல் நவீன் மேலும் வெட்ட வந்ததால், காவல் ஆய்வாளர் அம்பேத்கர் துப்பாக்கியால் அவரது கால் முட்டியில் சுட்டுப் பிடித்தார்
இதனையடுத்து சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நவீனைச் சேர்த்துள்ளனர். அத்துடன் காயம்பட்ட காவலர் அய்யப்பனும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்.
Follow Us