டி.ஆர்.பி தேர்வு எழுத உள்ள தனியார் மற்றும் அரசு கல்லூரிகளில் தற்காலிகமாக பணியாற்றி வரும் கௌரவ மற்றும் உதவி பேராசிரியர்களுக்கான பணி அனுபவ சான்று பெற சுமார் 3,700 பேர், வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள கல்லூரி கல்வி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில் இவர்களில் பலர், கடந்த 3 நாட்களாகவே வந்து திரும்பி செல்வதாகக் கூறப்படுகிறது.  

Advertisment

இந்நிலையில் நேற்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த சுமார் 300 க்கும் மேற்பட்டோருக்கு இரவு ஆகியும் பணி அனுபவ சான்று வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதாகக் கூறி நூற்றுக்கும் மேற்பட்ட உதவி மற்றும் கௌரவ பேராசிரியர்கள்ம் கல்லூரி கல்வி இணை இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பணி அனுபவ சான்று வழங்க கோரி நள்ளிரவு வரை காத்திருந்தனர். நள்ளிரவுக்கு பின்னர், காவல் துறையினர் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வரும் திங்கட்கிழமை (01-12-25) அனைவருக்கும் சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதற்காக தற்போது டோக்கன் வழங்குவதாக கூறியதை அடுத்து நள்ளிரவு 12 வரை காத்திருந்த சிலர் டோக்கன் பெற்று சென்றனர். இருந்த போதும் ஒரு சிலர் காத்துக்கொண்டுள்ளனர்.

Advertisment

இது குறித்து கல்லூரி கல்வி இணை இயக்குனரை தொடர்பு கொண்டு கேட்ட போது, ‘தங்கள் அலுவலக ஊழியர்கள் எஸ்.ஐ.ஆர் பணிக்கு சென்றிருப்பதாகவும், ஆனாலும் தற்போது வரை மூன்றாயிரம் போருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இன்றும் சான்றிதழ் வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது எங்கள் அலுவலக ஊழியர் ஒருவர் மயங்கி விழுந்ததால் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளோம். இருந்த போதும் மீதம் உள்ளவர்களுக்கு வரும் திங்கட்கிழமை சான்றிதழ் வழங்கப்படும்’ என தெரிவித்தார்.