கல்லூரியில் மாணவிக்கு நல்ல முறையில் பாடம் கற்றுக் கொடுக்க வேண்டிய பேராசிரியர் ஒருவர், மாணவிக்கு பாலியல் பாடம் நடத்திய சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
திருச்சி மாவட்டம், முசிறியில் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வரும் இந்தக் கல்லூரியில் நாகராஜன் என்பவர் தமிழ்த் துறையின் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். மாணவிகளிடம் இயல்பாக இருப்பது போன்ற ஒரு தோற்றத்தைக் கட்டமைத்து வைத்திருக்கும் நாகராஜன், தனது வகுப்பில் பயிலும் மாணவி ஒருவரிடம் அத்துமீறி நடந்திருக்கிறார். கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் ஒரு மாணவியிடம் சகஜமாகப் பேசி வந்த பேராசிரியர் நாகராஜன், அவர் மீது அதிக அக்கறை கொண்டவராகக் காட்டிக் கொண்டுள்ளார்.
ஒரு பேராசிரியர் நம்மீது மிகுந்த அக்கறையுடன் இருக்கிறாரே என்று நம்பிய அந்த மாணவி, தன்னுடைய தனிப்பட்ட விஷயங்களைப் பகிர்ந்ததாகக் கூறப்படுகிறது. இதனைப் பயன்படுத்திக் கொண்ட பேராசிரியர் நாகராஜன், சம்பந்தப்பட்ட மாணவிக்குச் செல்போனில் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்திருக்கிறார். தனது செல்போன் எண்ணிலிருந்து மாணவிக்கு அழைப்பு விடுக்காமல், மாணவர்கள், தெரிந்தவர்கள் எனக் கிடைக்கும் செல்போன்களிலிருந்து எல்லாம் டிசைன் டிசைனாக பாலியல் வார்த்தைகளை அள்ளி தெளித்திருக்கிறார்.
ஒரு ஆடியோவில், “எனக்கு எல்லாமாகவும் நீ இருப்பியா? எல்லோரும் கிளாஸ் முடிந்து போய்விடுவாங்க, நீ மட்டும் வெயிட் பண்ணு, நான் வர்றேன். யாராவது கேட்டா, அக்கா ஒருத்தவங்க வருவாங்க, அவங்களோடு சேர்ந்து போறதுக்கு வெயிட் பண்ணுறேன்னு சொல்லு” என்று பேராசிரியர் கூற, “வேண்டாம் சார், எனக்குப் பயமாக இருக்கிறது” என்று மாணவி மறுத்திருக்கிறார். இருப்பினும், விடாத அந்தப் பேராசிரியர் மாணவியை மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாக்குகிறார்.
அதிலும், பாலியல் வெறியின் உச்சமாக ஒரு கட்டத்தில், “நான் உன்மேல எவ்வளவு அன்பு வைத்திருக்கிறேன் தெரியுமா? எனக்கு எல்லாமாகவும் நீ வேணும். என்கூட நிர்வாணமாக எல்லாம் தூங்கமாட்டியா? உன்கிட்ட இருக்க எல்லாமும் எனக்குக் கிடைக்குமா?” என்று தனது வக்கிரத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆனால், பேராசிரியரின் நடவடிக்கையை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல், அந்த மாணவி ஏதோ ஏதோ சொல்லிச் சமாளித்திருக்கிறார். ஆனாலும், விடாத பேராசிரியர் தனது பாலியல் விருப்பத்தைத் திணித்திருக்கிறார்.
இந்நிலையில், இந்த செல்போன் ஆடியோக்கள் வெளியாகி, மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள் மற்றும் சக பேராசிரியர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. இந்த விவகாரம் குறித்து கல்லூரி முதல்வர் கணேசனிடம் நாம் கேட்டபோது, “மாணவியிடம் தமிழ்ப் பேராசிரியர் நாகராஜன் பேசிய குரல் பதிவு குறித்து எனது கவனத்திற்கு வந்துள்ளது. இதையடுத்து, திருச்சி மண்டல கல்லூரி இணை இயக்குநரிடமிருந்து வந்த அறிவுரையின்படி, கல்லூரி உள்புகார் பாதுகாப்பு கமிட்டி மற்றும் மூத்த பேராசிரியர்கள் கொண்ட குழு என இரு விசாரணைக் குழுக்களை அமைத்து விசாரிக்கப்பட்டு வருகிறது. முதற்கட்ட விசாரணையில், பேராசிரியர் செய்த தவறு உறுதி செய்யப்பட்டிருக்கிறது” எனத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, மாணவிக்கு பாலியல் ரீதியான நோக்கத்துடன் தொந்தரவு கொடுத்த பேராசிரியர் நாகராஜன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்திருக்கிறது.