புதுச்சேரியில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தின் கிளையில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு படிக்கும் மாணவி ஒருவர், பேராசிரியர் கொடுக்கும் பாலியல் தொல்லை குறித்து அழுதுகொண்டே பேசும் ஆடியோ ஒன்று வெளியாகி.. மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சீனியர் மாணவிக்கு அனுப்பப்பட்ட அந்த ஆடியோவில், `அக்கா ஒரு அஞ்சாறு மாசமா ரொம்ப கஷ்டமா இருக்கு. இதை யாருகிட்ட சொல்றதுன்னு தெரியல. என்னால படிப்புல கவனம் செலுத்த முடியல. ஹெச்.ஓ.டி சார் என்ன ரொம்ப ஹராஸ் பன்றாரு. ரொம்ப அசிங்கமா, அருவருப்பா பேசுறாரு. நிர்வாணமா போட்டோ அனுப்புனு என்கிட்ட ஓப்பனாவே கேக்குறாரு அக்கா. டெய்லி லேட் நைட் போன் பண்ணி, `டிரஸ் இல்லாம போட்டோஸ் அனுப்பு. இல்லைன்னா உன் இண்டர்னல் மார்க்ல கை வச்சிடுவேன். அப்புறம் உன்னால எக்ஸாம் எழுத முடியாது’னு நேரடியாவே சொல்றாருக்கா. இதெல்லாம் என்னால வீட்ல சொல்ல முடியல. வீட்ல சொன்னா என்ன படிக்க வேணாம்னு சொல்லிடுவாங்க. நான் படிக்கணும் கா. டிகிரி முடிச்சிட்டு பி.ஹெச்.டி டாக்டரேட்ல பட்டம் வாங்கணும் கா. இந்த மாதிரி எனக்கு மட்டும் நடக்கல. என்ன மாதிரி இவரால 30, 40 பொண்ணுங்க பாதிக்கப்பட்டிருக்காங்க அக்கா" என கண்ணீர்மல்க கூறியுள்ளார்.
இந்த விவகாரம்.. மாணவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது தொடர்பாகக் காரைக்காலை சேர்ந்த முன்னாள் கல்வி அமைச்சர் கமலக்கண்ணன் ஆடியோ ஆதாராங்களுடன், சம்பந்தப்பட்ட பேராசிரியர் மாதவைய்யா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதனிடம் புகார் மனு அளித்துள்ளார். இதேபோல் காலாப்பட்டில் உள்ள பல்கலைக்கழத்திலும், பேராசிரியர் பிரவீன் என்பவர், ஆராய்ச்சி கல்வி பயிலும் மாணவி ஒருவரை திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி, கர்ப்பமாக்கிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் பேராசிரியர் பிரவீன் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க துணைவேந்தரிடம் பேசி முடிக்கலாம் எனக்கூறி துணைவேந்தரை அவதூறாக பேசும் மற்றொரு ஆடியோவும் வெளியாகியிருக்கிறது.
இப்படி புதுவை பல்கலைக்கழகத்தில் அடுக்கடுக்கான பாலியல் குற்றச்சாட்டுகளால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மாணவிகளின் பாலியல் குற்றச்சாட்டுகளை மூடி மறைக்கும் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை கண்டித்தும், சம்மந்தப்பட்ட பேராசிரியர்களை பணி நீக்கம் செய்ய வலியுறுத்தியும்.. இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்றுசேர்ந்து, துணைவேந்தர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் மாணவர்களின் கோரிக்கை தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகம் எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்காததால், மாணவர்களின் போராட்டம் நள்ளிரவு வரை நீடித்தது. இதனை தொடர்ந்து காலாப்பட்டு காவல்நிலைய போலீசார் நள்ளிரவு 2 மணியளவில் பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்து, மாணவர்கள் மீது தடியடி நடத்தி, 6 மாணவிகள் உட்பட 24 மாணவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்தனர். இதனால் பல்கலைக்கழக வளாகம் போர்க்களமானது. போலீசாரின் இச்செயலால்.. புதுச்சேரி முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. தற்போது, அமைதியான முறையில் போராடிய மாணவர்களை, அத்துமீறி தாக்கிய புதுச்சேரி காவல்துறையை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.