'Problems at the first conference' - Tvk unloads 5 lakh drinking water bottles Photograph: (tvk)
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் ஆகஸ்ட் 21 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான இறுதிகட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. முன்னதாக விக்கிரவாண்டியில் நடந்த முதல் மாநில மாநாட்டின் பொழுது மாநாட்டில் குவிந்த தொண்டர்கள் மற்றும் ரசிகர்களுக்கு முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில் அதனைப் போக்கும் வகையில் ஆகஸ்ட் 21 ஆம் தேதி நடைபெற இருக்கும் தவெக இரண்டாவது மாநில மாநாட்டில் 5 லட்சம் குடிநீர் பாட்டில்கள் இறக்கப்பட்டுள்ளது. மாநாட்டுத் திடலில் மட்டும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் அமர்ந்து மாநாட்டை பார்ப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
தடுப்புகள் அமைக்கப்பட்டு சதுரங்களாக திடல் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சதுரத்திலும் 2000க்கும் மேற்பட்டவர்கள் அமர்ந்து மாநாட்டை பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த முறை ஒவ்வொரு சதுரத்திலும் தொண்டர்கள் நுழைவதற்கு மூன்று அடி இடைவெளி விடப்பட்டிருந்த நிலையில் இந்த முறை 6 அடி இடைவெளி விடப்பட்டுள்ளது.
110 அடி நீளம் 100 அடி அகலத்துடன் 60 சதுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சதுரத்திற்கும் பைப்புகள் மூலம் தண்ணீர் எடுத்துச் செல்லப்படுகிறது. அதன் வழியாக தொண்டர்கள் டம்ளர்கள் மூலம் தண்ணீரைப் பிடித்து அருந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் ஒரு லிட்டர் அளவு கொண்ட 5 லட்சம் குடிநீர் பாட்டில்கள் இறக்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றி கழகம் கட்சியின் கொடி மற்றும் விஜய் புகைப்படம் இடம் பெற்றுள்ள அந்த பாட்டிலில் 'ஊருக்கு ஊர்; வீதிக்கு வீதி; வீட்டுக்கு வீடு' என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது.