“எத்தனை நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் உண்மையை மறைக்க முடியாது” - பிரியங்கா காந்தி ஆவேசம்!

priyanga-gandhi-ls-

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆபரேஷன் சிந்தூர் மற்றும் ஆபரேஷன் மகாதேவ் குறித்து இன்று (29.07.2025) மக்களவையில் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “ஆபரேஷன் சிந்தூர் பயங்கரவாதிகளை அனுப்பியவர்களைக் கொன்றது. ஆபரேஷன் மகாதேவ் தாக்குதலை நடத்தியவர்களைக் கொன்றது” எனப் பேசியிருந்தார். இதனையடுத்து ஆபரேஷன் சிந்தூர் மீதான விவாதத்தில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பிரியங்கா காந்தி பேசினார். 

அப்போது அவர், “நேற்று அவையில் பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. நான் உரைகளைக் கேட்டுக்கொண்டிருந்தேன். பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் 1 மணி நேர உரை நிகழ்த்தினார். ஆபரேஷன் சிந்தூர், பயங்கரவாதம், பாதுகாப்பு மற்றும் வரலாறு பற்றிப் பேசினோம். ஆனால் ஏப்ரல் 22, 2025 அன்று 26 அப்பாவிகள் கொல்லப்பட்ட இந்த சம்பவம் ஏன்?, எப்படி நடந்தது? என்பதைப் பற்றி விவாதிக்க மறந்துவிட்டோம். பஹல்காமுக்கு அருகிலுள்ள பைசரன் பள்ளத்தாக்கில் அவர்கள் (பயங்கரவாதிகள்) என்ன செய்து கொண்டிருந்தார்கள்?. காஷ்மீர் இப்போது பாதுகாப்பாக இருப்பதாக விளம்பரப்படுத்தப்பட்டது. மக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முயற்சிக்கும்போது ஏன் பாதுகாப்பு இல்லை?. சிந்தூர் நடவடிக்கையின் போது சொத்துக்கள் இழப்பு குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியதை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் விமர்சித்தார். 

மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது பிரதமர், உள்துறை அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோரின் பொறுப்பல்லவா?. பைசரன் பள்ளத்தாக்குக்கு ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் செல்வது அரசாங்கத்திற்குத் தெரியாதா?. ஏன் அங்கு பாதுகாப்பு இல்லை? அவர்கள் ஏன் கடவுளின் கருணையில் இருந்து கை விடப்பட்டனர்?. சம்பவம் நடந்த சில நாட்களுக்குப் பிறகு, (பஹல்காம்) தாக்குதலுக்கு டி.ஆர்.எஃப். (TRF : The Resistance Front) என்ற அமைப்பு பொறுப்பேற்றது. இந்த டி.ஆர்.எஃப்.என்றால் என்ன?. இது 2020இல் காஷ்மீரில் பயங்கரவாத நடவடிக்கைகளைத் தொடங்கியது. மேலும் ஏப்ரல் 22, 2025 அன்று 25 பேர் மீது பயங்கரவாதத் தாக்குதல்களைச் செய்துள்ளது. இந்தப் பட்டியலில் 2024இல் நிகழ்ந்த ரியாசி தாக்குதலும் அடங்கும். மத்திய அரசு 2023ஆம் ஆண்டு டி.ஆர்.எஃப்.யை பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது.  அதற்கு காரணம் என்ன?.

புலனாய்வுப் பணியகத்தின் (I.B. - Intelligence Bureau) தலைவர் ராஜினாமா செய்தாரா?. இந்த விவகாரத்தில் யாராவது ராஜினாமா செய்தார்களா?. உளவுத்துறை உள்துறை அமைச்சகத்தின் கீழ் வருகிறது. அமித்ஷா ராஜினாமா செய்தாரா?. இது நமது அரசாங்கத்தின், புலனாய்வு அமைப்புகளின் மிகப்பெரிய தோல்வி. இந்த சம்பவத்திற்கு யார் பொறுப்பேற்பார்கள். யாராவது ராஜினாமா செய்திருக்கிறார்களா?. ஏன் (பைசரன் பள்ளத்தாக்கு, பஹல்காம்) அங்கு ஒரு பாதுகாப்புப் பணியாளர் கூட இல்லை?.  குடிமக்களின் பாதுகாப்பு பிரதமர், உள்துறை அமைச்சர் மற்றும் பாதுகாப்பு அமைச்சரின் பொறுப்பல்லவா?.

நேற்று, பாதுகாப்பு அமைச்சர் ஒரு மணி நேரம் உரையாற்றினார், அப்போது அவர் பயங்கரவாதம், நாட்டைப் பாதுகாப்பது பற்றிப் பேசினார். மேலும் ஒரு வரலாற்றுப் பாடத்தையும் வழங்கினார். ஆனால் ஒரு விஷயம் விடுபட்டது.  இந்தத் தாக்குதல் எப்படி நடந்தது?. நேருவும் இந்திரா காந்தியும் செய்ததைப் பற்றி இன்று மத்திய உள்துறை அமைச்சர் பேசினார். அவர் என் அம்மாவின் கண்ணீரைப் பற்றியும் பேசினார். இதற்கு நான் பதில் சொல்ல விரும்புகிறேன். பயங்கரவாதிகள் என் தந்தையைக் கொன்றபோது என் தாயின் கண்ணீர் வடிந்தது. இன்று, நான் அந்த 26 பேரைப் பற்றி (பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள்) பேசும்போது, அவர்களின் வலியை நான் புரிந்துகொள்வதால் தான். ஆனால் போர் நிறுத்தம் ஏன் அறிவிக்கப்பட்டது என்பதற்கு அவர் (அமித்ஷா) ஒருபோதும் பதிலளிக்கவில்லை.

இந்த அரசாங்கம் எப்போதும் கேள்விகளில் இருந்து தப்பிக்க முயற்சிக்கிறது. அவர்களுக்கு நாட்டின் குடிமக்கள் மீது பொறுப்புணர்வு இல்லை. உண்மை என்னவென்றால் அவர்கள் இதயத்தில் பொதுமக்களுக்கு இடமில்லை. அவர்களுக்கு எல்லாமே அரசியல், விளம்பரம். இன்று இந்த அவையில் அமர்ந்திருக்கும் பெரும்பாலானவர்களுக்கு பாதுகாப்பு உள்ளது. ஆனால் அன்று பஹல்காமில் 26 பேர் அவர்களது குடும்பத்தினர் முன்னிலையில் கொல்லப்பட்டனர். அன்று பைசரன் பள்ளத்தாக்கில் இருந்த அனைவருக்கும் எந்தப் பாதுகாப்பும் இல்லை. நீங்கள் எத்தனை நடவடிக்கைகளை (operations) மேற்கொண்டாலும் உண்மையை மறைக்க முடியாது”என ஆவேசமாக பேசினார். 

jammu and kashmir lok sabha monsoon session priyankan gandhi Operation Sindoor Pahalgam Operation Mahadev
இதையும் படியுங்கள்
Subscribe