நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 28 முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் கடந்த சில தினங்களாக நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தின் போது சீன ஊடுறுவல் தொடர்பான நாட்டின் பாதுகாப்பு குறித்தும் அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் குறித்தும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்பட எதிர்க்கட்சி எம்.பிக்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் இது குறித்து பேசுவதற்கு அனுமதி கொடுக்கப்படாத காரணத்தினால் எதிர்க்கட்சி எம்.பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், இரு அவையும் பல முறை ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.

Advertisment

இந்த சூழ்நிலையில், குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை உரையாற்ற இருந்தார். ஆனால், எதிர்க்கட்சி எம்.பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். குறிப்பாக, எதிர்க்கட்சியைச் சேர்ந்த பெண் எம்பிக்கள் இருக்கையிலிருந்து எழுந்து அவையின் மையப்பகுதிக்கு வந்தனர். பின்னர், அவர்கள் பிரதமரின் இருக்கையை நோக்கி திரளாகச் சென்றனர். இந்த சம்பவத்தால் மக்களவையில் சிறிது நேரம் அவையில் பதற்றமான சூழல் நிலவியது. அதனால், அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. மேலும், பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற முடியாத நிலை ஏற்பட்டது.

Advertisment

இந்த நிலையில், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பிரதமர் மோடி மக்களவையில் இன்று (05.02.2026) மாலை 5 மணியளவில் உரையாற்ற இருந்தார். ஆனால், பிரதமர் மோடி இன்று வராமல் தவிர்த்துள்ளார். இதனால், மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பிரதமர் மோடி பதிலளிக்காமலேயே குரல் வாக்கெடுப்பின் மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனிடையே, பிரதமர் மோடியை தாக்க எதிர்க்கட்சிகள் சதி நடப்பதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இது குறித்து அவர் மக்களவையில் கூறுகையில், “நேற்று சபையில் என்ன நடந்தது என்பதை நாட்டு மக்கள் பார்த்தனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவையில் பிரதமரின் நாற்காலியை எப்படி நெருங்கினார்கள் என்பதை அனைவரும் பார்த்தார்கள். ஏதேனும் அசம்பாவிதம் நடக்க வாய்ப்பிருக்கலாம் என்று எனக்கு தகவல் கிடைத்தது. அப்படி ஒரு சூழ்நிலை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள், சபைக்கு வர வேண்டாம் என்று பிரதமர் மோடியிடம் தெரிவித்தேன். மக்களவையில் சில பெண் உறுப்பினர்களின் நடத்தை முன்னெப்போதும் இல்லாத வகையில் நேற்று இருந்தது. பிரதமர் மோடியைத் தாக்க எதிர்க்கட்சிகள் தாக்கச் சதி செய்துள்ளனர். இதன் காரணமாக அவை ஒத்திவைக்கப்பட்டது. தவறுதலாக எதுவும் நடத்து விடக்கூடாது என்பதாலேயே நான் தான் பிரதமர் மோடியை அவைக்கு வர வேண்டாம் என்றேன். நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவைக்குத் துண்டுப் பிரசுரம், பதாகைகளைக் கொண்டு வரத் தடை விதிக்கப்படுகிறது” எனத் தெரிவித்தார். பிரதமர் மோடியை, ஜோதிமணி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பெண் எம்.பிக்கள் முற்றுகையிட திட்டமிட்டிருந்ததாக சபாநாயகர் ஓம் பிர்லா குற்றம் சாட்டியிருப்பது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவின் இந்த குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் எம்.பியும், காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி பதிலளித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “பிரதமர் சபாநாயகரின் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கிறார். நேற்று, மூன்று பெண்கள் அமர்வின் முன் நின்றதால், அவருக்கு சபைக்கு வர தைரியம் இல்லை. இது என்ன முட்டாள்தனம்?. அவையில் விவாதம் நடக்கவில்லை, ஏனென்றால் விவாதத்தை நடத்த அரசு விரும்பவில்லை” என்று கூறினார்.