நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 21ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. அதில், ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதம் நேற்று முன் தினம் (28-07-25) நாடாளுமன்ற மக்களவையில் தொடங்கியது . இந்த விவாதத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, திமுக எம்.பி கனிமொழி உள்ளிட்டோர் பேசினர். அதனை தொடர்ந்து, நேற்று மாநிலங்களவையிலும் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதம் நேற்று நடைபெற்றது. இந்த விவாதத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் பேசினர்.
மக்களவையில் நடைபெற்ற ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சோனியா காந்தியை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். அதற்கு காங்கிரஸ் பொதுச் செயலாளரும், வயநாடு எம்.பியுமான பிரியங்கா காந்தி பதிலடி கொடுத்தது மக்களவையில் சுவாரஸ்யமாக அமைந்தது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷ பேசியதாவது, “பஹல்காம் பயங்கரவாதிகள் எங்கே போனார்கள் என்று எதிர்க்கட்சியினர் நேற்று கேட்டார்கள். எங்கள் இராணுவம் தாக்கியது. உங்கள் ஆட்சிக் காலத்தில் மறைந்திருந்தவர்கள் இன்று தேடப்பட்டு கொல்லப்படுகிறார்கள். அதிகாலை வேளையில், நான் காலை உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, சல்மான் குர்ஷித் அழுவதைப் பார்த்தேன். ஏதோ பெரிய விஷயம் நடந்திருப்பதாக நினைத்தேன். சோனியா காந்தி பாட்லா ஹவுஸ் பயங்கரவாதிகளுக்காக அழுததாக அவர் கூறினார். சோனியா காந்தி அழ வேண்டியிருந்தால், தியாகி மோகன் சர்மாவுக்காக அழுதிருக்க வேண்டும்” என்று கூறினார்.
மத்திய அமைச்சர் அமித் ஷா வைத்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்து பேசிய காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி, “என் தாய் கண்ணீர் வடித்தார். இதற்கு நான் பதிலளிக்கிறேன். தனது கணவர் ராஜீவ் காந்தி பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட போது என் தாயார் அந்த கண்ணீரை வடித்தார். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட 26 பேரைப் பற்றி நான் இந்த சபையில் நின்று பேசுகிறேன் என்றால், அவர்களின் வலியை நான் அறிவேன், உணர முடிகிறது” என வேதனையோடு தெரிவித்து அமர்ந்தார்.
கடந்த 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் 13ஆம் தேதி டெல்லியில் தொடர்ச்சியாக 5 குண்டுகள் வெடித்து சுமார் 30 கொல்லப்பட்டனர், பலர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு இந்தியன் முஜாஹிதீன் அமைப்பு பொறுப்பேற்றது. இந்த சம்பவம் நடந்த ஒரு வாரத்திற்கு பிறகு என்கவுண்டர் நிபுணர் மோகன் சந்த் சர்மா தலைமையிலான டெல்லி போலீஸ் குழு, தெற்கு டெல்லியின் பட்லா ஹவுஸில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சோதனை நடத்தியது. அப்போது, போலீஸ் குழுவுக்கு பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கடுமையான துப்பாக்கிச் சூட்டில், இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை அடுத்து கடந்த 2012ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலின் போது ஒரு ஒரு பேரணியில் உரையாற்றிய காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித், அப்போதைய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் படங்களைப் பார்த்து கதறி அழுததாகக் கூறினார். இந்த சம்பவத்தை தான் அமித் ஷா நாடாளுமன்ற மக்களவையில் தனது உரையின் போது கடுமையாக சாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.