இந்தாண்டுக்கான நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 1ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில், எஸ்.ஐ.ஆர் விவகாரம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் இந்த விவகாரம் தொடர்பாக நாளை (09-12-25) மற்றும் நாளை (10-12-25) விவாதம் நடைபெறவுள்ளது. இதற்கிடையில், மத்திய பா.ஜ.க அரசு பல்வேறு மசோதாக்களை தாக்கல் செய்து நிறைவேற்றி வருகிறது.

Advertisment

இந்த நிலையில், வந்தே மாதரத்தின் 150வது ஆண்டு விழா குறித்து விவாதத்தை மக்களவையில் இன்று (08-12-25) மத்திய பா.ஜ.க அரசு கொண்டு வந்தது. இந்த விவாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி, ஆளுங்கட்சி எம்.பிக்கள், எதிர்க்கட்சிகள் எம்.பிக்கள் என தொடர்ந்து பேசி வருகின்றனர்.

Advertisment

அந்த வகையில், காங்கிரஸ் பொதுச் செயலாளரும் வயநாடு எம்.பியுமான பிரியங்கா காந்தி இந்த விவாதத்தில் பங்கேற்று பேசினார். அப்போது அவர், “நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடரின் போது வந்தே மாதரம் குறித்து விவாதம் நடத்த வேண்டியதன் அவசியம் என்ன? அவரச பிரச்சனைகளில் இருந்து பொதுமக்களின் கவனத்தை திசைதிருப்ப அரசு முயற்சி செய்து வருகிறது. வந்தே மாதரத்தை அரசியலாக்குவது எந்த நியாயமும் இல்லை. மேற்கு வங்கத்தில் தேர்தல் வரவிருப்பதால் வந்தே மாதரத்தை பா.ஜ.க கையில் எடுத்துள்ளது.

நாட்டின் வளர்ச்சி குறித்து எதிர்கால இலக்குகள் பா.ஜ.கவிடம் இல்லை. கடந்த காலத்தைப் பற்றி பேசியே பா.ஜ.க அரசியல் செய்து வருகிறது. பிரதமர் மோடி நன்றாகவே பேசுகிறார், ஆனால் அதில் எந்த உண்மையும் இல்லை. முன்னுக்குப் பின் முரணாக பிரதமர் மோடி பேசி வருகிறார். காங்கிரஸ் மாநாட்டில் தான் முதல் முறையாக வந்தே மாதரம் பாடப்பட்டது. நேரு குறித்து குறை கூறுவதையே பிரதமர் மோடி வழக்கமாக வைத்திருக்கிறார். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மற்றும் தேசத்திற்காக மகத்தான தியாகங்களைச் செய்தவர்கள் மீது மோடி அரசு புதிய குற்றச்சாட்டுகளை உருவாக்குகிறது. மிகவும் முக்கியமான பிரச்சினைகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப அரசாங்கம் முயற்சிக்கிறது. உங்களுக்கு அரசியல் தான் முக்கியம், ஆனால் எங்களுக்கு நாட்டு மக்களே முக்கியம்” என்று கொந்தளித்து பேசினார்.

Advertisment

முன்னதாக இந்த விவாதத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “அக்டோபர் 20 ஆம் தேதி, நேரு நேதாஜிக்கு கடிதம் எழுதி, வந்தே மாதரம் குறித்த ஜின்னாவின் உணர்வுகளை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்தார். பாடலின் ஆனந்தமத் சங்கம் முஸ்லிம்களைத் தூண்டிவிடும் என்று அவர் குறிப்பிட்டார். ‘வந்தே மாதரத்தின் பின்னணியை நான் படித்திருக்கிறேன், இந்தச் சூழல் உண்மையில் முஸ்லிம்களைப் புண்படுத்தக்கூடும் என்று நான் நம்புகிறேன்’ என்று நேரு போஸுக்கு எழுதினார். என்று கூறியிருந்தார்.