Priyanka, don't control me says by Jaya Bachchan makes fellow MP laugh in Parliament
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த ஜூலை 21ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் கடந்த ஜூலை 28ஆம் தேதி முதல் இரு அவைகளிலும் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதம் கடந்த 3 நாட்களாக நடைபெற்றது. இந்த விவாதத்தில் பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் பேசினர்.
இந்த விவாதத்தின் போது சமாஜ்வாதி கட்சியின் எம்.பியும் மூத்த நடிகையுமான ஜெயா பச்சன், எம்.பி பிரியங்கா சதுர்வேதியிடம் நகைச்சுவையாக பேசியது தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக மாநிலங்களவையில் பேசிய ஜெயா பச்சன், “ஏப்ரல் 22ஆம் தேதி பஹல்காமின் பைசரன் பள்ளத்தாக்கில் கொல்லப்பட்ட 26 அப்பாவி பொதுமக்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கலைத் தெரிவிக்கிறேன். நீங்கள் பணியமர்த்திய எழுத்தாளர்களுக்கு நான் உங்களை வாழ்த்துகிறேன். நீங்க பெரிய பெயர்கள் சூட்டுகிறீர்கள். அதற்கு ஏன் ‘சிந்தூர்’ என பெயரிட்டீர்கள்? கொல்லப்பட்டவர்களின் மனைவிகளின் சிந்தூர் (குங்குமம்) அழிக்கப்பட்டது” எனப் பேசினார்.
உடனடியாக ஆளுங்கட்சி எம்.பிக்கள் கூச்சலிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். இதில் கோபமடைந்த ஜெயா பச்சன், “நீங்கள் பேசுங்கள், இல்லை நான் பேசுகிறேன். நான் இதை அனுமதிக்க மாட்டேன். நீங்கள் பேசும்போது நான் எப்போதும் குறுக்கிடுவதில்லை. ஒரு பெண் பேசும்போது நான் ஒருபோதும் குறுக்கிடுவதில்லை. அதனால் தயவுசெய்து உங்கள் நாக்கை அடக்கிக் கொள்ளுங்கள்” என்றார். உடனடியாக பா.ஜ.க எம்.பி சுரேந்திர சிங் நகர் எழுந்து, ‘ஜெயா ஜி, நீங்கள் இந்த இருக்கையில் அமர்ந்திருக்கிறீர்கள். நீங்கள் என்ன பேசினாலும் அது பதிவு செய்யப்படும்’ என்று கூறினார்.
இதில் ஜெயா பச்சன் கோபமாகப் பேசினார். இதை பார்த்து, அவருக்கு அருகில் அமர்ந்திருந்த உத்தவ் தாக்கரேவின் சிவசேனா எம்.பி பிரியங்கா சதுர்வேதி ஜெயா பச்சனை அமைதிப்படுத்த முயன்றார். ஆனால் ஜெயா பச்சன், “பிரியங்கா என்னை கட்டுப்படுத்தாதீங்க” என்று கூறினார். இதனை கேட்ட பிரியங்கா சதுர்வேதி சிரித்தார். ஜெயா பச்சனும் கூட இதற்குப் பிறகு ஒரு புன்னகையை வெளிப்படுத்தினார். ஆனால் விரைவில் தனது வேகத்திற்குத் திரும்பி, ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக பாஜக அரசாங்கத்தை கடுமையாக சாடினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.