திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்தவர் காந்தி (55). இவர் ஈரோட்டில் தங்கி அங்குள்ள ஒரு நட்சத்திர விடுதியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் காந்திக்கு விடுமுறை என்பதால் நண்பர் வீட்டுக்குச் சென்று விட்டு இரவு 11.30 மணியளவில் ஈரோடு சி.என்.சி கல்லூரி பஸ் நிறுத்தம் அருகே தான் தங்கியிருக்கும் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த 4 வாலிபர்கள் மதுபோதையில் காந்தியிடம் தகராறில் ஈடுபட்டு அவரின் செல்போனை பறித்துக் கொண்டு காந்தியை கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் காந்தி படுகாயமடைந்து உயிருக்கு போராடினார். இதனை அடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. அந்த வழியாக வந்த சிலர் ஒருவர் படுகாயத்துடன் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்து அவரை மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு காந்தியின் நிலைமை மேலும் மோசம் அடைந்ததால் உயர் சிகிச்சைக்காக சேலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் இது தொடர்பாக ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது இந்த சம்பவத்தில் ஈடுபட்டது ஈரோடு கொத்துக்காரர் தோட்டம் பகுதியைச் சேர்ந்த அரவிந்த் (21), சந்தோஷ் (20), நந்தேஸ்வரன் (24) மற்றும் 17 வயது சிறுவன் என தெரிய வந்தது.இதை அடுத்து அந்த 4 பேரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினார். அப்போது அவர்கள் காந்தியை தாக்கியதை ஒப்புக்கொண்டனர். அதுமட்டுமின்றி அந்த வழியாக வந்த வடமாநில வாலிபர் ராஜேஷ் என்பவரையும் அந்த கும்பல் தாக்கியது  தெரியவந்தது.

Advertisment

இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் சேலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காந்தி சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். கைதான 4 பேர் மீதும் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரிய வந்தது. மேலும் அவர்கள் இதே போன்று சிலரைத் தாக்கி வழிப்பறியில் ஈடுபட்டிருக்கலாம் என கோணத்தில்  அவர்களிடம் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

ஈரோடு மாநகர் பகுதியில் கடந்த சில நாட்களாக போதை கும்பல் ஆங்காங்கே மக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டு வருகின்றனர். இதனால் மக்கள் அச்சப்படும் சூழ்நிலை உள்ளது. எனவே இரவு நேர ரோந்தை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.