Advertisment

மாற்றுத்திறனாளி குழந்தை பிறப்பு! ரூ.75 லட்சம் இழப்பீடு வழங்கத் தனியார் மருத்துவமனைக்கு உத்தரவு!

Untitled-1

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பாலா மனைவி பிரியா. கடந்த 2021 ஆம் ஆண்டு கருவுற்ற நிலையில் தஞ்சாவூரில் உள்ள ஒரு பிரபலமான தனியார் மருத்துவமனையில் பரிசோதனைகள், ஆலோசனைகள் பெற்று சிகிச்சை பெற்றுள்ளார். மருத்துவர்களின் ஆலோசனைப்படி ஸ்கேன், ரத்தம் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டு மருத்துவர்கள் எழுதிக் கொடுத்த மருந்து மாத்திரைகளைச் சாப்பிட்டு வந்துள்ளார். வயிற்றில் உள்ள குழந்தை முழு வளர்ச்சியுடன் உள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

Advertisment

தொடர்ந்து குழந்தை பிறந்த நிலையில் ஒரு வருடமாகியும் குழந்தையின் வளர்ச்சி செயல்பாடுகள் ஏதுமில்லை என்ற நிலையில் அதற்கான மருத்துவர்களைப் பார்த்த போது குழந்தைக்கு மரபணு பாதிப்பு உள்ளது. இதனை கர்ப்ப காலத்திலேயே கண்டறிந்திருக்கலாமே என்று கூறியுள்ளனர். இதனைக் கேட்டு இடிந்து போன பெற்றோர் எல்லா பரிசோதனைகளும் செய்து குழந்தை முழு வளர்ச்சியும் ஆரோக்கியத்துடனும் உள்ளதாகச் சொன்னார்கள் என்று கூறியுள்ளனர். மேலும் குழந்தையை சராசரி குழந்தைகள் போல செயல்பட வைக்க வேண்டும் என்று பெற்றோர், மூளை நரம்பியல் உள்ளிட்ட ஏராளமான மருத்துவர்களையும் சந்தித்து பரிசோதனையும் ஆலோசனையும் சிகிச்சையும் கொடுத்தும் பயனில்லை என்ற வேதனை குழந்தையின் பெற்றோரை மட்டுமின்றி உறவினர்களையும் கலங்கச் செய்துள்ளது.

Advertisment

இது குறித்து பெற்றோர் தஞ்சை தனியார் மருத்துவமனைக்குச் சென்று கேட்ட போது அங்கு அலட்சியமான பதிலே கிடைத்ததால் மேலும் நொந்து போயுள்ளனர். இந்த நிலையில் தான் மாற்றுத்திறனாளி குழந்தையின் பெற்றோர் புதுக்கோட்டை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் கடந்த 2024 ஜனவரியில் வழக்கு தொடுத்தனர். மேலும் பிரியா கருவுற்றது முதல் பிரசவம் வரை தஞ்சை தனியார் மருத்துவமனையில் மருத்துவர்கள் ஆலோசனைப்படி எடுக்கப்பட்ட பரிசோதனை ஆவணங்கள், மருத்துவ அறிக்கை, பணம் செலுத்திய ரசீதுகள் ஆகியவற்றைத் தாக்கல் செய்தனர். இந்த வழக்கை நுகர்வோர் ஆணையத் தலைவர் சேகர் மற்றும் உறுப்பினர்கள் சுகுணாதேவி, அழகேசன் ஆகியோர் விசாரணை செய்தனர்.

இந்த நிலையில் வழக்கு விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்தத் தீர்ப்பில் தஞ்சாவூர் தனியார் மருத்துவமனை நிர்வாகம் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு இழப்பீடு ரூ.75 லட்சமும் மனுதாரர் வழக்குச் செலவு ரூ.25 ஆயிரமும் சேர்த்து வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

PRIVATE HOSPITAL Thanjavur pudukkottai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe