கோவை மாவட்டத்தில் தொடர்ந்து குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவது அப்பகுதி மக்களிடையே மிகுந்த வேதனையை ஏற்படுத்தி உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு கோவை விமான நிலையத்தின் பின்புறத்தில் போதை ஆசாமிகள் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. இதனைத் தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு போதை கும்பல் ஒன்று இளைஞர் ஒருவரைச் சரமாரியாகத் தாக்கி, அவரை கொலை செய்ய முயன்றது. அப்போது, அங்கிருந்த பொதுமக்கள் பாதிக்கப்பட்ட இளைஞரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இத்தகைய சூழலில் தான், தொடர்ந்து வரும் குற்றச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த வேண்டுமெனப் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் காவல்துறையிடம் கோரிக்கை வைத்து வரும் நிலையில், மீண்டும் ஒரு அதிர்ச்சிகர சம்பவம் அரங்கேறியுள்ளது. கோவை மாவட்டம் சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் பயின்று வருகிறார் ரம்யா (17 வயது / பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). கல்லூரியில் முதலாமாண்டு பயின்று வரும் ரம்யாவை, அதே வகுப்பில் பயிலும் மாணவர் ஒருவர் சில மாதங்களாகக் காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் தனது விருப்பத்தை ரம்யாவிடம் அவர் தெரிவித்த போது, அதற்கு ரம்யா மறுப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவர் ரம்யாவை கத்தியால் சரமாரியாகக் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த ரம்யாவை சக மாணவர்கள் மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது ரம்யா, கல்லூரி குழுமத்தின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கல்லூரி வளாகத்திற்குள்ளேயே அரங்கேறியுள்ள இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து சரவணம்பட்டி காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட மாணவனைக் காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட மாணவி தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Follow Us