Private bus employees risk the lives of passengers and collide Who will overtake
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வழியாக செல்லும் தனியார் பேருந்து ஊழியர்களுக்கு சில நிமிட இடைவெளியில் பயண நேரம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்குள் தினசரி யார் முந்திச் செல்வது என்ற பிரச்சனை எழுந்துள்ளது. பல நேரங்களில் ஊழியர்கள் மோதிக்கொள்வதும் வாடிக்கையாகிவிட்டது.
அதன்படி, இன்று காலை ஆலங்குடியில் இருந்து ஒரு தனியார் பேருந்து புறப்பட்டு புதுக்கோட்டை சென்றுகொண்டிருந்தது. அப்போது அந்த பேருந்தை விரட்டிச் சென்ற மற்றொரு தனியார் பேருந்து, புதுக்கோட்டை விடுதி சாலை அருகே வேகமாக சென்று முன்னாள் சென்ற பேருந்தை வழிமறித்து குறுக்கே நிறுத்தியது. இதனால் இரு பேருந்துகளிலும் இருந்த பயணிகள் பதறி அலறிவிட்டனர். பேருந்துகள் நிறுத்தப்பட்டதும் இரு பேருந்து பயணிகளும் வேகமாக இறங்கி மோதிக்கொண்டது பயணிகளை அச்சப்பட வைத்தது.
சுமார் 10 நிமிடங்கள் வரை மோதல் நடந்த நிலையில், ஆலங்குடி - புதுக்கோட்டை நெடுஞ்சாலை ரோந்துப் பணியில் இருந்த போக்குவரத்து போலீசார் அங்கு வந்து இரு பேருந்து ஊழியர்களையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதே போல, தினம் தினம் தனியார் பேருந்து ஊழியர்கள் பயணிகளை பணயம் வைத்து பேருந்துகளை குறுக்கே நிறுத்தி சண்டைப் போடுவது வழக்கமாகிவிட்டது. மோதலில் ஈடுபடும் ஊழியர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் தான் பயணிகள் அச்சமின்றி பயணிக்க முடியும், இல்லை என்றால் பெரும் விபத்துகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது என்கின்றனர் பயணிகள். இதே போல தான் தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை சாலையில் தனியார் பேருந்துகள் போட்டி போட்டு முந்துவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு பல உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது என்கின்றனர்.
Follow Us