மதுரை மாவட்டம் வில்லாங்குடி நகரில் வசித்து வருபவர்கள் முனியசாமி - அங்கம்மாள் தம்பதியினர். இவர்களது மகன், 25 வயதான ஹரிஹரசுதன். கடந்த 2020 ஆம் ஆண்டு கஞ்சா வழக்கில் ஹரிஹரசுதன் கைது செய்யப்பட்டு, குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

திடீரென கல்வியின் மீது ஆர்வம் ஏற்பட்டதால், மதுரை சிறையில் இருந்தபடியே 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதினார். இதில் 500-க்கு 400 மதிப்பெண்கள் பெற்று வெற்றியடைந்ததோடு, சிறைக் கைதிகளில் அதிக மதிப்பெண் பெற்று முதல் இடத்தையும் பிடித்தார்.

104
ஹரிஹரசுதன்
Advertisment

இதனைத் தொடர்ந்து, ஐ.டி.ஐ. படிப்பிற்காக ஹரிஹரசுதன் மதுரையில் இருந்து திருச்சி மத்திய சிறைக்கு ஆறு மாதங்களுக்கு முன்பு மாற்றப்பட்டார். அங்கு ஐ.டி.ஐ. படித்து வந்த அவர், சனிக்கிழமை(26.7.2025) விடுமுறையின்போது தனது சிறை அறையில் படுத்திருந்தார். அப்போது, அங்கு வந்த துணை ஜெயிலர் மணிகண்டன், ஹரிஹரசுதனை அவமதிக்கும் வகையில் பேசி, அவரது ஊரைப் பற்றி விசாரித்ததாகக் கூறப்படுகிறது. ஹரிஹரசுதன் தனது ஊரின் பெயரைச் சொன்னவுடன், மணிகண்டன் ஆபாசமாகப் பேசி, தனது ஹூ காலால் அவரைத் தாக்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது

101

Advertisment

மேலும், சிறையில் இருந்த 30 பேரைக் கொண்டு ஹரிஹரசுதனைத் தாக்கி, அவரை நிர்வாணப்படுத்தி, லத்தியை ஆசனவாயில் நுழைத்து கொடூரமான செயலில் ஈடுபட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அத்துடன், ஹரிஹரசுதனை மின்விளக்கு மற்றும் மின்விசிறி இல்லாத இருட்டு அறையில் அடைத்து, உணவு வழங்காமல் சித்திரவதை செய்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து, ஹரிஹரசுதனின் தாயார் கண்ணீர் மல்க திருச்சி கே.கே.நகர் காவல் நிலையத்திலும், முதலமைச்சர் தனிப்பிரிவிலும் புகார் மனு அளித்து, தனது மகனைக் காப்பாற்றக் கோரியதுடன், துணை ஜெயிலர் மணிகண்டன் மற்றும் ஜெயிலர் பழனி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

103
அலெக்ஸ்

இந்தச் சூழலில், இந்த விவகாரம் தொடர்பாக குற்ற வழக்கில் சிறையில் உள்ள அலெக்ஸ் என்பவர் தனது மனைவியுடன் பேசிய ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆடியோவில், "என் உயிருக்கு ஆபத்து உள்ளது. நான் இறந்தால், அதற்கு ஜெயிலர் பழனி மற்றும் துணை ஜெயிலர் மணிகண்டனே காரணம். ஹரிஹரசுதன் என்ற இளைஞரை அவர்கள் அடித்து கொடுமைப்படுத்தினர். அதனை நான், 'ஏன் சார், அந்தப் பையனை அடித்துத் துன்புறுத்துகிறீர்கள்?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'அவனை முடித்துவிட்டு உனக்கு வருகிறோம். முன்னாள் முதல்வர் கலைஞர், தற்போதைய முதல்வர் ஸ்டாலினையே எங்கள் சீனியர்கள் சிறையில் வைத்திருக்கிறோம். அதனால், நீயெல்லாம் எங்களுக்கு ஒரு ஆளா?' என்று கூறி மிரட்டுகின்றனர். ஹரிஹரசுதன் ஐந்து நாட்களாக உணவு இல்லாமல் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார். உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து என்னைக் காப்பாற்றிவிடுங்கள்" என்று மனைவியுடனான செல்போன் உரையாடலில் தெரிவித்துள்ளார். இந்த ஆடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில், திருப்புவனத்தில் அஜித்குமார் என்ற இளைஞர் காவல்துறையால் தாக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது ஹரிஹரசுதன் மீதான இந்தக் கொடுமை குறித்த குற்றச்சாட்டுகள் மேலும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளன.