சில பெரிய ஜவுளிக்கடைகளில் நாம் வாங்கிய துணிகளை வைத்துத்தரும் பைகளுக்கும் சேர்த்து பில் போட்டு பணம் வசூலித்துவிடுவார்கள். அந்தப் பைகளில் அவர்களது கடையின் பெயரைப் பெரிதாகப் போட்டு விளம்பரம் செய்திருப்பார்கள். பெரும்பாலான வாடிக்கையாளர்களுக்கு இது பிடிக்காது. இது விளம்பரச் சட்டத்தின் கீழ் வருகிறது. நுகர்வோர் ஏமாற்றப்படுவதாகத் தோன்றினால் நுகர்வோர் நீதிமன்றத்திலும் புகாரளிக்க முடியும். சிவகாசியிலும் பாலசுப்பிரமணியன் என்பவர் நம்மைச் சந்தித்தபோது தனது எரிச்சலை வெளிப்படுத்தினார். “என் மகனுக்குக் கல்யாண பத்திரிக்கை அச்சடிக்கிறதுக்கு சிவகாசியில்  இருக்கிற ஈஸ்வரி பிரிண்டிங் பிரஸ்ஸுக்கு போனேன். 

Advertisment

அவர்கள் காட்டின சாம்பிள் பத்திரிக்கையில் அந்த அச்சாபீஸோட லோகோவும் வெப்சைட் விபரமும் இருந்துச்சு. எதுலயும் நான் கொஞ்சம் கறாரா இருப்பேன். அப்பவே சொல்லிவிட்டேன். எங்க வீட்டு கல்யாண பத்திரிக்கையில் உங்கள் கம்பெனியோட லோகோ இருக்கக்கூடாதென்று. அவர்களும் சரின்னாங்க. ஆனால் பாருங்கள்.. இப்ப அந்த லோகோவ போட்டே கல்யாண பத்திரிக்கை அச்சடித்து தந்திருக்கிறார்கள். சொன்னதுக்கு மாறா ஏன் இப்படி பண்ணுனீங்கன்னு கேட்டேன். அதெல்லாம் சரியாகத்தான் பண்ணிருக்கோம்னு அசால்டா சொல்லிவிட்டார்கள். நான் அவர்களுக்கு லீகல் நோட்டீஸ் அனுப்பப் போகிறேன்.” என்றார். இது பொதுவான விவகாரம் என்பதாலும் பலரும் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் என்பதாலும், ஈஸ்வரி ஆப்செட் பிரிண்டிங் ஒர்க்ஸ் அலுவலகத்தைத் தொடர்புகொண்டோம். 

Advertisment

டிசைனிங் செக்‌ஷனில் பணிபுரிபவர் நமது லைனில் வந்தார். “கார்ட் தயாராகும்போதே கம்பெனி லோகோவை சேர்த்து அச்சடிச்சிருவோம். இதுல ஒரு தப்பும் இல்ல. அவர் லீகல் நோட்டீஸ் அனுப்பினால், எங்கள் முதலாளி பதில் சொல்லிருவாரு.” என்றார்.  இதுகுறித்து அச்சக அதிபர் ஒருவரிடம் பேசினோம் “நிறைய அச்சகங்கள் இப்படி பண்ணுகிறது. திருமண அழைப்பிதழென்பது ஒருவருடைய தனிப்பட்ட விருப்பம் சார்ந்தது. அந்த வாடிக்கையாளரோடு அனுமதி இல்லாமல், அவரிடம் முன் ஒப்பந்தம் பண்ணாமல், கம்பெனி லோகோவை போடுறது தவறானது. கஸ்டமர்கிட்ட தனி அனுமதி வாங்காமலோ பிரிண்ட் பண்ணுகிறது தொழில்முறை சார்ந்தது இல்ல. அங்கீகாரம் இல்லாத செயலும்கூட. சின்ன லோகோ விஷயத்துக்காக சட்ட நடவடிக்கை எடுக்கிறதா சொல்லுகிறது கொஞ்சம் ஓவராத்தான் இருக்கிறது. ஆனாலும், வழக்கு தொடர வாடிக்கையாளருக்கு உரிமை உண்டு.” என்றார். பாலசுப்பிரமணியனோ “சின்ன லோகோவோ பெரிய விளம்பரமோ நோ என்றால் நோ-தான்..: என்று சீரியஸாக கூறினார்.