வேலூர் ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள JPM தனியார் திருமண மண்டபத்தில் இன்று பாஜக சார்பில் நடைபெற்ற வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டத்தில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நாளை கோவை வரும் பாரதப் பிரதமரை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரடியாகச் சென்று வரவேற்காமல் கடிதம் மூலமாகவோ அறிக்கை மூலமாகவோ வரவேற்பது சரியானது அல்ல. வந்தாரை வரவேற்கும் தமிழகத்தில் முதல்வர் வரவேற்பதில் ஈகோ பார்த்து வரவேற்காமல் இருப்பது நல்லதல்ல. எவ்வளவு மாற்றுக் கொள்கை இருந்தாலும் நட்புறவோடு அரசியலை அணுக வேண்டும் என்பது என்னுடைய கருத்து” என்றார்.
தமிழக அரசு மத்திய அரசிடம் கேட்ட பல திட்டங்கள் வரவில்லை என்று கூறப்படுகிறது என செய்தியாளர்கள் கேட்டதற்கு, “நிதிப் பகிர்வை அளிக்கக்கூடிய நிதி ஆயோக் கூட்டத்திற்கு தமிழக முதலமைச்சர் செல்லவில்லை. இருந்த போதிலும் கோவை வரும் பிரதமரிடம் முதல்வர் ஸ்டாலின் நேரடியாகச் சென்று கோரிக்கைகளை வைத்து தேவையான திட்டங்களைப் பெறலாம். ஆனால் தமிழகத்திற்கு வரும் பிரதமரை வரவேற்காமல் இருப்பது தமிழ்க் கலாச்சாரம் அல்ல. கேரளா போன்ற மற்ற மாநிலங்களில் ஏற்றுக்கொள்ளப்படாத கட்சியினராக இருந்தாலும் கூட பிரதமரை வரவேற்கின்றனர்.
முதலமைச்சர் வேற்றுமையைக் காண்பிக்கக் கூடாது. மத்திய–மாநில அரசுகள் இணைந்து பணியாற்றினால் மக்களுக்கு நல்லது நடக்கும் என்பதை பீகார் தேர்தல் நமக்குத் தெரிவித்துள்ளது. வாரிசு அரசியலுக்கு பீகார் தேர்தல் ஒரு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணி இரட்டை எஞ்சின் போல இருந்தால் நல்லது நடக்கும். அதைப் போல தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுகவும் பாஜகவும் வெற்றி பெற்றால் இரட்டை எஞ்சின் போல தமிழகத்தில் பல நல்ல திட்டங்கள் கொண்டு வந்து நிறைவேற்றப்படும். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெறும்; இதற்கு பீகார் தேர்தல் முன் உதாரணமாக அமைந்துள்ளது.
வாரிசு அரசியலுக்கு பீகார் தேர்தல் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. பீகார் தேர்தலில் அரசியலில் புதியவர்களுக்கு ஒரு நல்ல பாடம் கற்பிக்கப்பட்டுள்ளது. எனவே தவெக தலைவர் விஜய், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ போதை ஒழிப்புக்கு நடைப் பயணம் மேற்கொள்வதாகக் கூறியுள்ளார்; அவர் அறிவாலயம் நோக்கித்தான் செல்ல வேண்டும்; அங்கிருந்துதான் போதை கலாச்சாரம் வருகிறது.
எஸ்ஐஆர் தொடர்பாக அரசு ஊழியர்கள் போராட்டம் செய்யாமல் பார்த்துக் கொள்வது தமிழக அரசின் கடமை. பீகார் தேர்தலில் எஸ்ஐஆர் தொடர்பாக 64 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்; அவர்கள் அனைவரும் போலி வாக்காளர்கள். அப்படி உண்மையான வாக்காளர்கள் நீக்கப்பட்டிருந்தால் புகார் தெரிவித்திருப்பார்கள், ஆர்பாட்டத்தில் ஈடுபட்டிருப்பார்கள். எனவே இதனை எதிர்க்கட்சியினர் வேண்டுமென்றே அரசியல் செய்கின்றனர். கடந்த கால தேர்தல்களில் திமுக வெற்றி பெற்றதற்கு போலி வாக்காளர்களே காரணம். எஸ்ஐஆர் மூலம் போலி வாக்காளர்கள் நீக்கப்படுவார்கள் என்பதற்கே திமுக–காங்கிரஸ் கட்சிகள் எஸ்ஐஆருக்கு பயப்படுகின்றன.
மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத திமுகவைத் தோற்கடிக்க வேண்டும் என்ற கோட்பாடு உள்ள கட்சிகள் உதிரியாக இல்லாமல் ஒன்றிணைந்து வியூகம் அமைத்துத் தோற்கடிக்க வேண்டும். அதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்” என்றார்.
Follow Us