Prime Minister Modi's speech in Malaysia about The Tamil
மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராகிமின் அழைப்பை ஏற்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இரண்டு நாள் அரசு முறை பயணமாக டெல்லியில் இருந்து விமானம் மூலம் இன்று (07.02.2026) மலேசியா புறப்பட்டுச் சென்றார். இந்த பயணத்தின் போது மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராகிமைச் சந்தித்து இருதரப்பு உறவை வலுப்படுத்துவது பற்றி ஆலோசனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டிற்குப் பிறகு பிரதமர் மோடி மலேசியாவிற்கு மேற்கொள்ளும் 3வது பயணம் இதுவாகும்.
அதன்படி மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடியை, மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராகிம், அந்நாட்டு மனிதவளத் துறை அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் மற்றும் துணை வெளியுறவுத்துறை அமைச்சர் லுகானிஸ்மான் பின் அவாங் சௌனி ஆகியோருடன் இணைந்து அன்புடன் வரவேற்றார். இதனைத் தொடர்ந்து, பிரதமர் மோடிக்கு இரு நாடுகளின் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் வகையில் வண்ணமயமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து விமான நிலையத்திலிருந்து, இந்தியாவில் இருந்து மலேசியாவிற்கு புலம்பெயர்ந்தோர் மத்தியில் உரையாற்றும் இடத்திற்கு மலேசியப் பிரதமர் அன்வருடன் பிரதமர் மோடி கார் ஒன்றாக காரில் பயணம் மேற்கொண்டார். அதனை தொடர்ந்து புலம்பெயர் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர், “மலேசியாவுடனான நமது உறவு ஒவ்வொரு வருடமும் உயர்ந்து கொண்டே இருக்கிறது. 2024இல் பிரதமர் அன்வரின் டெல்லி வருகையின் போது நாங்கள் நமது உறவை மேம்படுத்தினோம். ஒரு விரிவான கூட்டணி ஒப்பந்தத்தை போட்டோம். இன்று, நாங்கள் இருவரும் கைகோர்த்து முன்னேற்றம் மற்றும் செழிப்புக்காக வேலை செய்கிறோம். ஒவ்வொருவடைய வெற்றியையும் நம்முடைய சொந்த வெற்றியை போலவே நாம் கொண்டாடுகிறோம். சந்திரயான் -3இன் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்கு பிரதமர் அன்வர் இப்ராஹிம் தெரிவித்த நல்வாழ்த்துக்களால் நான் நெகிழ்ந்து போனேன்.
உங்களுடன் நான் உடன்படுகிறேன், இந்தியாவின் வெற்றி என்பது மலேசியாவின் வெற்றி. அது ஆசியாவின் வெற்றி. அதனால்தான் நான் சொல்கிறேன், நமது உறவின் வழிகாட்டும் சொல் தாக்கம் (IMPACT) என்பதாகும். தாக்கம் என்றால் கூட்டு மாற்றத்தை மேம்படுத்துவதற்கான இந்தியா-மலேசியா கூட்டாண்மை. நமது உறவுகளின் வேகத்தில் தாக்கம் இருக்கிறது. நமது லட்சியங்களின் அளவில் தாக்கம், நமது மக்களின் நலனுக்காக தாக்கம் இருக்கிறது. நாம் அனைவரும் இணைந்து, முழு மனிதகுலத்திற்கும் நன்மை செய்ய முடியும். இந்திய நிறுவனங்கள் எப்போதும் மலேசியாவுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக இருந்துள்ளன. மலேசியாவின் முதல் மற்றும் ஆசியாவின் மிகப்பெரிய இன்சுலின் உற்பத்தி ஆலையை உருவாக்குவதில் நாங்கள் ஒரு பங்கு வகித்தது ஒரு பெருமையாகும். 100-க்கும் மேற்பட்ட இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மலேசியாவில் செயல்பட்டு, ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குகின்றன.
மலேசியா- இந்தியா டிஜிட்டல் கவுன்சில் நமது டிஜிட்டல் ஒத்துழைப்பிற்காக புதிய பாதைகளை வகுத்து வருகிறது. இந்தியாவின் யுபிஐ (UPI) விரைவில் மலேசியாவிற்கு வரும் என்பதை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியப் பெருங்கடலின் அதே நீல நீரை நாம் பகிர்ந்து கொள்கிறோம். கடலுக்கு அப்பால், நாம் ஒருவரையொருவர் சந்திக்க விரும்புகிறோம். இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று பார்க்க உங்கள் அனைவரையும் நான் அழைக்கிறேன். கடந்த சில ஆண்டுகளில், இந்தியாவில் உள்கட்டமைப்பு மற்றும் இணைப்பு வசதிகளில் முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சியை கண்டுள்ளது. நமது விமான நிலையங்களின் எண்ணிக்கை ஒரு தசாப்தத்தில் இரு மடங்காகியுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகள் சாதனை வேகத்தில் அமைக்கப்பட்டு வருகின்றன. வந்தே பாரத் போன்ற நவீன ரயில்கள் சர்வதேச அளவில் பாராட்டுக்களைப் பெற்று வருகின்றன. உங்களில் அதிகமானோர் பயணம் செய்து நம்பமுடியாத இந்தியாவை அனுபவிக்க வேண்டும் என்று நான் ஊக்குவிக்கிறேன். உங்கள் மலேசிய நண்பர்களையும் உங்களுடன் அழைத்து வர வேண்டும். தனியாக வராதீர்கள், ஏனென்றால் மக்களோடு மக்கள் தொடர்பு கொள்ள வேண்டும். உலகிலேயே இந்திய வம்சாவளியினரின் இரண்டாவது பெரிய சமூகம் மலேசியாவில் உள்ளது. இந்திய மற்றும் மலேசிய மக்களின் இதயங்களை இணைக்கும் பல விஷயங்கள் உள்ளன. நீங்கள் நம்மை இணைக்கும் ஒரு உயிருள்ள பாலமாக இருக்கிறீர்கள்.
தமிழ், இந்தியாவின் உலகிற்கு அளித்த பரிசு ஆகும். தமிழர்கள் தங்கள் திறமைகளால் மனிதகுலத்திற்குச் சேவை செய்துள்ளனர். இந்தியாவின் துணைக் குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், நமது வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கர், ஒன்பது முறை பட்ஜெட்டை சமர்ப்பித்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மற்றும் நமது தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் ஆகியோர் அனைவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதை நான் பெருமையுடன் கூறுகிறேன்.
அதேபோல், மலேசியாவில் உள்ள தமிழ் புலம்பெயர் சமூகத்தினர் பல்வேறு துறைகளில் சமூகத்திற்குச் சேவை செய்து வருகின்றனர். உண்மையில், தமிழ் புலம்பெயர் சமூகம் பல நூற்றாண்டுகளாக இங்கு வசித்து வருகிறது. இந்த வரலாற்றால் உத்வேகம் பெற்று, மலாயா பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் இருக்கையை நிறுவியதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். நமது பகிரப்பட்ட பாரம்பரியத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில், இப்போது நமது திருவள்ளுவர் மையத்தை அமைக்க உள்ளோம். தமிழ் இந்தியாவின் உலகத்துடனான இணைப்புப் பாலம்; தமிழ் இலக்கியம் நித்தியமானது, தமிழ் கலாச்சாரம் உலகளாவியது. இந்த நாட்டில் தமிழ் பேசும் மக்கள் உள்ளனர், மலேசிய அரசாங்கம் தமிழை ஒரு சிறுபான்மை மொழியாக அங்கீகரித்துள்ளது” என்று கூறினார்.
Follow Us