பீகார் மாநில சட்டசபையின் பதவிக்காலம் வரும் நவம்பர் 22ஆம் தேதியுடன் நிறைவு பெறுவதையடுத்து, அம்மாநிலத்தில் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் நவம்பர் 14ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன.
மொத்தம் 243 தொகுதிகள் கொண்ட பீகாரில், ஆளும் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் - பாஜக அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி, தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதா தளம்-காங்கிரஸ் அடங்கிய மகாகத்பந்தன் கூட்டணி, தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன.இதனால், பீகார் தேர்தலில் கடும் போட்டி நிலவுகிறது.
பீகார் தேர்தல் களம் சூடுபிடித்திருக்கூடிய வேளையில், பிரதமர் நரேந்திர மோடி பீகாரில் தனது முதல் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார். அதில், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியையும் காங்கிரஸையும் கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். பீகாரின் சமஸ்திபூரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் இன்று (24-10-25) தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசினார். அதில் அவர், “பீகாரில் ‘காட்டு ராஜ்ஜியம்’ ஒழிக்கப்பட்ட 2005 அக்டோபரில், நிதிஷ் குமார் தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நல்லாட்சி தொடங்கியது. ஆனால் காங்கிரஸ்-ஆர்.ஜே.டி கூட்டணி மத்தியில் ஆட்சியில் இருந்தது. அவர்கள் பல தடைகளை உருவாக்கினர், மேலும் ஆர்.ஜே.டி பீகாரைச் சேதப்படுத்த எந்த முயற்சியையும் விட்டுவைக்கவில்லை. பீகார் மக்களை பழிவாங்கும் நோக்கில் ஆர்ஜேடி செயல்பட்டு வந்தது” என காட்டமாக விமர்சித்துப் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய போது பிரதமர் நரேந்திர மோடி, மக்களிடம் தங்கள் மொபைல் போன்களில் டார்ச் லைட் எரிய வைக்குமாறு கேட்டுக்கொண்டார். அதன்படி பொதுமக்களும் தங்களது மொபைல் டார்ச் லைட்டை எரிய வைத்தனர். அப்போது பிரதமர் மோடி, “இவ்வளவு வெளிச்சம் இருக்கும்போது, நமக்கு விளக்கு தேவையா? பீகாருக்கு விளக்கு மற்றும் அதன் ஆதரவாளர்கள் தேவையில்லை” என்று வேடிக்கையாக பேசினார். பீகாரின் பிரதான எதிர்கட்சியாக இருக்கும் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் சின்னம், விளக்கு சின்னம் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/10/24/fla-2025-10-24-17-20-00.jpg)