Prime Minister Modi waved and invited Girls holding banners in the crowd
கோவையில் நடைபெற்ற தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று (19-11-25) கோவை வந்தார். அதன் பின்னர், கொடிசியா வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இயற்கை வேளாண் கூட்டமைப்பு கண்காட்சியை அவர் தொடங்கி வைத்தார்.
அதன் தொடர்ச்சியாக இயற்கை வேளாண் கூட்டமைப்பு மாநாட்டை அவர் தொடங்கி வைத்தார். இதையடுத்து நாடு முழுவதும் உள்ள 9 கோடி விவசாயிகளுக்கு ரூ.18,000 கோடிக்கும் அதிகமான தொகையை, பி.எம். கிஷான் (PM-KISAN) திட்டத்தின் 21வது தவணையைப் பிரதமர் மோடி வெளியிட்டார்.
இந்த நிகழ்வின் மேடையில் பிரதமர் மோடி பேசிக் கொண்டிருந்த போது கூட்டத்தில் இருந்த சிறுமிகள் இருவர் பதாகைகளை ஏந்திக் கொண்டிருந்தனர். அதில் ஒரு சிறுமி தனது பதாகையில், ‘இந்தியா 2வது பொருளாதாரமாக மாறும் போது பட்டம் பெறுவேன், 1வது பொருளாதாரமாக மாறும் போது நான் ஓய்வு பெறுவேன். உங்களுடைய தொலைநோக்குப் பார்வைக்கு நன்றி’ என்று எழுதி நின்று கொண்டிருந்தார்.
அதனை கண்ட பிரதமர் மோடி மேடையில் இருந்தவாறே, “கூட்டத்தில் சிறுமிகள் பதாகைகளை ஏந்தி கொண்டிருக்கிறார். அந்த குழந்தையிடம் இருந்து பாதுகாப்பு படையினர் அந்த பதாகையை வாங்கிக் கொண்டு வாருங்கள். அந்த பதாகையில் என்ன எழுதியிருந்ததோ அந்த நான் கருத்தில் கொள்கிறேன். ரொம்ப நேரமாக அந்த பதாகையை தூக்கி கொண்டு நின்றிருந்த உனக்கு ரொம்ப நன்றி” என்று கூறினார். இதனை கேட்ட மகிழ்ச்சியடைந்த சிறுமிகள் இருவர், தங்களது பதாகைகளை எடுத்துச் சென்று பாதுகாப்பு படையினரிடம் கொடுத்தனர். சிறுமிகளிடம் பிரதமர் மோடி பதாகையை கேட்ட நிகழ்வு சுவாரஸ்ய நிகழ்வாக அமைந்துள்ளது.
Follow Us