ஜி20 தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று (21.11.2025) காலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கிற்கு புறப்பட்டுச் சென்றார். இதன் மூலம் பிரதமர் மோடி இன்று முதல் 23ஆம் தேதி வரை என 3 நாட்கள் தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார். இது உலகளாவிய தெற்கில் நடைபெறும் நான்காவது தொடர்ச்சியான ஜி - 20 உச்சி மாநாடு ஆகும். அதன் ஒரு பகுதியாக ஜி - 20 உச்சி மாநாட்டின் மூன்று அமர்வுகளிலும் பிரதமர் மோடி உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது
இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தென்னாப்பிரிக்காவின் தலைமையின் கீழ் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெறும் 20வது ஜி - 20 தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, சிரில் ராமபோசாவின் அழைப்பின் பேரில், நான் நவம்பர் 21-23, 2025 வரை தென்னாப்பிரிக்கா குடியரசிற்கு வருகை தருகிறேன். ஆப்பிரிக்காவில் நடைபெறும் முதல் ஜி - 20 உச்சி மாநாடு இதுவாகும் என்பதால் இது மிகவும் சிறப்பு வாய்ந்த உச்சிமாநாடாக இருக்கும். 2023ஆம் ஆண்டு இந்தியா ஜி - 20 தலைமை தாங்கியபோது, ​​ஆப்பிரிக்க ஒன்றியம் ஜி - 20இல் உறுப்பினராகியது.
இந்த உச்சிமாநாடு முக்கிய உலகளாவிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க ஒரு வாய்ப்பாக இருக்கும். இந்த ஆண்டு ஜி - 20 மாநாட்டின் கருப்பொருள் 'ஒற்றுமை, சமத்துவம் மற்றும் நிலைத்தன்மை' ஆகும், இதன் மூலம் தென்னாப்பிரிக்கா இந்தியாவின் புது தில்லி மற்றும் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற முந்தைய உச்சிமாநாடுகளின் முடிவுகளை முன்னெடுத்துச் சென்றுள்ளது. 'வசுதைவ குடும்பகம்' மற்றும் 'ஒரே பூமி, ஒரே குடும்பம் மற்றும் ஒரே எதிர்காலம்' என்ற நமது தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப இந்தியாவின் முன்னோக்கை உச்சிமாநாட்டில் முன்வைப்பேன்
நட்பு நாடுகளின் தலைவர்களுடனான எனது கலந்துரையாடல்களையும், உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக திட்டமிடப்பட்டுள்ள 6வது ஐ.பி.எஸ்.ஏ. (IBSA - India Brazil South Africa Dialogue) உச்சிமாநாட்டில் பங்கேற்பதையும் ஆவலுடன் எதிர்நோக்குகிறேன். இந்தப் பயணத்தின் போது, ​​இந்தியாவிற்கு வெளியே மிகப்பெரிய நாடுகளில் ஒன்றான தென்னாப்பிரிக்காவில் உள்ள இந்திய புலம்பெயர்ந்தோருடனான எனது கலந்துரையாடலையும் நான் ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/21/modi-sa-flight-trip-2025-11-21-10-32-53.jpg)