அரசு முறை பயணமாக கடந்த 29ஆம் தேதி பிரதமர் மோடி ஜப்பான் நாட்டிற்குச் சென்றார். அங்கு சென்ற அவர், ஜப்பான் பிரதமரைச் சந்தித்தார். அப்போது இரு நாடுகள் இடையே பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதனை தொடர்ந்து, நேற்று நடைபெற்ற 15வது இந்திய- ஜப்பான் வருடாந்திர மாநாட்டில் கலந்து கொண்டார்.
இந்த நிலையில், ஜப்பான் நாட்டில் இருந்து அரசு முறைப் பயணமாக பிரதமர் மோடி இன்று (30-08-25) சீனாவுக்குச் சென்றுள்ளார். அங்கு சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நாளை (31-08-25) சீனாவின் தியாஜினில் நடைபெறும் ‘ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு’ உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ளார்.
கடந்த 2001ஆம் ஆண்டில் சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய 6 நாடுகளின் முயற்சியால் ‘ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு’ (எஸ்சிஓ) என்ற கூட்டமைப்பு உருவானது. இந்த கூட்டமைப்பில் கடந்த 2017ஆம் ஆண்டில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக சேர்ந்தன. இந்த அமைப்பின் 2 நாள் மாநாடு கடந்த ஜூன் 25ஆம் தேதி சீனாவில் தொடங்கியது. இந்த கூட்டமைப்பில் பங்கேற்பதற்காக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சீனாவுக்குச் சென்றிருந்தார். 2 நாள்கள் நடைபெற்ற கூட்டமைப்பில் முடிவெடுத்து வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், பஹல்காம் தாக்குதல் குறித்து பாகிஸ்தானால் ஆதரிக்கப்படும் எல்லை தாண்டிய பயங்கரவாதம் தொடர்பான இந்தியாவின் கவலை குறித்தும் எதுவும் குறிப்பிடவில்லை என்று கூறி அந்த அறிக்கையில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மறுப்பு தெரிவித்தார்.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை இந்தியா வாங்கும் விவகாரம், பிரிக்ஸ் மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகள் ஆகியவற்றின் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து விமர்சனம் செய்து வரும் நிலையில், சீனாவுக்கு பிரதமர் மோடி சென்றிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. இந்த உச்சிமாநாட்டில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கலந்துகொள்வாரா என்பது தெரியவில்லை என்றாலும் ரஷ்ய பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்துகொள்வார்கள் என்று கூறப்படுகிறது.
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே கடந்த 30 ஆண்டுகள் மேலாக எல்லைகள் தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. இதனிடையே 2024ஆம் ஆண்டுக்கான பிரிக்ஸ் அமைப்பின் 16வது உச்சிமாநாடு ரஷ்யாவில் நடைபெற்றது. இந்த மாநாட்டின் இடையே, பிரதமர் மோடிக்கும், சீன அதிபர் ஷி ஜின்பிங்குக்கும் இடையே சந்திப்பு நடந்தது. இந்த சந்திப்பின் போது, இந்திய-சீன எல்லை பிரச்சனை குறித்து பேசப்பட்டதாகக் கூறப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையில், இரு நாடுகளுக்கு இடையேயான எல்லை பிரச்சனையில் தீர்வு காண ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகச் சொல்லப்பட்டது. இந்த சூழ்நிலையில், 2019ஆம் ஆண்டுக்குப் பிறகு பிரதமர் மோடி சீனாவிற்கு சென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.