தலைநகர் டெல்லியில் உள்ள நாடாளுமன்றத்தில் கடந்த ஜூலை 21ஆம் தேதி முதல் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்தே ஆபரேஷன் சிந்தூர் குறித்தும் பஹல்காம் தாக்குதல் குறித்தும் பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்தும் விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் எம்.பிக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இதில் கடந்த ஜூலை 28ஆம் தேதி ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக இரு அவைகளிலுமே விவாதம் நடத்தப்பட்டது.
இந்த நிலையில், நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று (05-08-25) காலை தொடங்கியது. அதே வேளையில் நாடாளுமன்ற நூலகக் கட்டிடத்தில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்றக் குழு கூட்டம் இன்று (05-08-25) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உட்பட முக்கிய பா.ஜ.க மற்றும் கூட்டணி எம்.பிக்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தின் போது, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டதற்காக தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பிக்கள் பிரதமர் மோடியைப் பாராட்டினர். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிராகவும், ஆபரேஷன் சிந்தூர் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டதற்காகவும் பிரதமர் மோடிக்கு மாலை அணிவித்து பாராட்டினர். அப்போது, ‘ஹர ஹர மகாதேவ்’ என கோஷங்களை எழுப்பினர். இதனையடுத்து, ஆபரேஷன் சிந்தூர் மற்றும் ஆபரேஷன் மகாதேவ் ஆகிய நடவடிக்கையின் வெற்றியைப் பாராட்டி ஒருமனதாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினர்.
இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக விவாதிக்கக் கோரி கோரிக்கை வைத்து எதிர்க்கட்சிகள் தவறு செய்துவிட்டனர். அவர்கள் அவமானப்படுத்தப்பட்டனர். தங்களைத் தாங்களே காலில் சுட்டுக் கொள்ளும் எதிர்க்கட்சியை வேறு எங்கு காண முடியும்? எதிர்க்கட்சிகள் ஒவ்வொரு நாளும் இதுபோன்ற விவாதங்களை நடத்த வேண்டும். இது எங்கள் நிலம், இது எனது களம், கடவுள் இங்கே என்னுடன் இருக்கிறார். இதுபோன்ற விவாதங்களைக் கோருவதன் மூலம், எதிர்க்கட்சிகள் தங்களைத் தாங்களே சுட்டுக் கொள்கின்றனர்” என்று கூறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.