கானா, அர்ஜெண்டினா, பிரேசில், நம்பீயா மற்றும் டிரினிடாட் & டொபாகோ ஆகிய ஐந்து நாடுகளுக்கு ஜூலை 2ஆம் தேதி ஜூலை 9ஆம் தேதி பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருந்தார். அதன்படி, பிரதமர் மோடி நேற்று (02-07-25) இந்தியாவில் இருந்து புறப்பட்டார். முதல் பயணமாக, ஆப்பிரிக்கா நாடான கானாவுக்கு நேற்று மாலை சென்றடைந்தார். கோடகா விமான நிலையத்தில் அவருக்கு இந்தியர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, கானா நாட்டில் அதிபர் ஜான் டிராமினி மஹாமா, கானா அரசு மற்றும் அந்நாட்டு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கானா சென்றுள்ள பிரதமர் மோடிக்கு, அந்நாட்டின் உயரிய விருதான ‘ஆபிசர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி ஸ்டார் ஆஃப் கானா’ (Officer of the order of ther star of Ghana) என்ற விருதை அந்நாட்டு அதிபர் ஜான் டிராமினி மஹாமா வழங்கி கெளரவித்தார். முன்னதாக, இரு தலைவர்களும் விரிவான விவாதங்களை நடத்தி, இருதரப்பு உறவை ஒரு விரிவான கூட்டாண்மையாக உயர்த்த முடிவு செய்தனர். கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக எந்த இந்தியப் பிரதமரும், கானாவுக்கு செல்லாத நிலையில், பிரதமர் மோடி முதல் முறையாக அங்கு சென்றுள்ளார். இந்த பயணத்தில் கானா மற்றும் இந்தியாவுக்கு இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
அதனை தொடர்ந்து, கானா நாட்டின் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “இந்த மதிப்புமிக்க அவையில் இன்று உரையாற்றுவதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். ஜனநாயகத்தின் உணர்வை வெளிப்படுத்தும் நாடான கானாவில் இருப்பது மிக அவசியம். உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் பிரதிநிதியாக, 140 கோடி இந்தியர்களின் நல்லெண்ணத்தையும் வாழ்த்துக்களையும் நான் என்னுடன் கொண்டு வந்திருக்கிறேன். கானா தங்கத்தின் பூமி என்று அழைக்கப்படுகிறது, உங்கள் மண்ணின் கீழ் உள்ளவற்றிற்காக மட்டுமல்ல, உங்கள் இதயத்தில் உள்ள அரவணைப்பு மற்றும் வலிமைக்காகவும். இந்தியா ஜனநாயகத்தின் தாய். உண்மையான ஜனநாயகம் விவாதத்தையும் ஆலோசனையும் ஊக்குவிக்கிறது. இது மக்களை ஒன்றிணைக்கிறது, இது கண்ணியத்தையும், மனித உரிமைகளையும் மேம்படுத்துகிறது.
எங்களுக்கு ஜனநாயகம் என்பது வெறும் அமைப்பு மட்டும் அல்ல, அது எங்கள் அடிப்படை விழுமியங்களின் ஒரு பகுதியாகும். இந்தியாவில் 2,500க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் இருக்கின்றன. வெவ்வேறு மாநிலங்களை 20 வெவ்வேறு அரசியல் கட்சிகள் ஆளுங்கின்றன. 22 அதிகாரப்பூர்வ மொழிகள், ஆயிரக்கணக்கான பேச்சுவழக்குகள் உள்ளன. இந்தியாவிற்கு வரும் மக்களை திறந்த இதயங்களுடன் வரவேற்க்கப்படுவதற்கு இதுவே காரணம். அதே மனப்பான்மை இந்தியர்கள் எங்கு சென்றாலும் எளிதாக ஒருங்கிணைக்க உதவுகிறது. இந்தியா மற்றும் கானாவின் வரலாறுகள் காலனித்துவ ஆட்சியின் வடுக்களைத் தாங்கி நிற்கின்றன. ஆனால், நமது ஆன்மா எப்போதும் சுதந்திரமாகவும் அச்சமற்றதாகவும் இருந்து வருகிறது. நமது நட்பு உங்கள் ஊரில் பிரபலமான சர்க்கரை ரொட்டி அன்னாசிப்பழத்தை விட இனிமையானது” என்று பேசினார்.
கானா நாட்டில் இருக்கும் பிரதமர் மோடி, ஜூலை 3இல் இருந்து 4ஆம் தேதி வரை இரண்டு நாள் பயணமாக டிரினிடாட் & டொபாகோ நாட்டுக்குச் செல்லவிருக்கிறார். அதனை தொடர்ந்து ஜூலை 4 முதல் 5ஆம் தேதி வரை அர்ஜெண்டினா நாட்டுக்குச் செல்வார். அதன் பின்னர், பிரேசிலில் நடக்கும் 17வது பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள செல்லவிருக்கிறார். தனது பயணத்தின் இறுதியில் நம்பீயா நாட்டுக்குச் செல்வார் என்பது குறிப்பிடத்தக்கது.