கடந்த ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இத்தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு பாகிஸ்தானில் உள்ள லஷ்கர்-இ தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பின் துணை அமைப்பு தான் காரணம் என்பது தெரிய வந்தது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற தாக்குதலை இந்தியா மேற்கொண்டிருந்தது. இந்த தாக்குதலில் பயங்கரவாதிகள் முகாம்கள், 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவம் எல்லையை மீறி தாக்குதல் நடத்தியது.

மே 7ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை பாகிஸ்தான் ராணுவம் நடத்தி வந்த தாக்குதல் அனைத்துக்கும் இந்தியா பதிலளித்து வந்தது. இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வந்த நிலையில், இந்த தாக்குதல் நிறுத்தப்படவுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். அதனை தொடர்ந்து, இந்தியாவும் பாகிஸ்தானும் மே 10ஆம் தேதி மாலை 5 மணியளவில் தாக்குதலை நிறுத்தப்படுவதாக அறிவித்தது. இதனால், இரு நாடுகளிடையே தற்போது அமைதி நிலவி வருகிறது. இதற்கிடையில் இந்த தாக்குதலை நிறுத்தியது அமெரிக்கா தான் என்றும், வர்த்தகத்தை முன்னிறுத்தி தான் இந்தியா - பாகிஸ்தானுடனான தாக்குதலை நிறுத்தினேன் என்றும் அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் செல்லும் இடங்களில் எல்லாம் தொடர்ந்து பேசி வருகிறார். இந்த விவகாரம் ஒட்டுமொத்த நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. அமெரிக்கா அதிபர் விட்ட எச்சரிக்கைக்கு கட்டுப்பட்டு பாகிஸ்தானுடனான தாக்குதல் நிறுத்தத்துக்கு இந்தியா ஒப்புக்கொண்டதா? என்ற எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். டிரம்ப்பின் கூற்றை இந்தியா மறுத்தபோதிலும், அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து பேசி வருகிறார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், கடந்த 21ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில், பஹல்காம் தாக்குதல், பயங்கரவாதிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர், இந்தியா - பாகிஸ்தான் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் பேச்சு, பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் விவகாரம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும் என மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளிலுமே எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்ததால் 1 வாரமாக நாடாளுமன்றத்தில் எந்த விவாதமும் நடக்காமல் முடங்கியது. கடந்த 1 வாரமாக எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், கடந்த 28ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக விவாதம் நடத்தப்பட்டது. இந்த விவாதத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் பேசினர்.

அதனை தொடர்ந்து ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக நேற்று (29-07-25) மக்களவையில் பேசிய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் பெயரை உச்சரிக்காமலே இந்த தாக்குதலை எந்த உலக தலைவரும் நிறுத்தவில்லை என்று கூறினார். பிரதமர் மோடி மக்களவையில் பேசியதாவது, “மே 10ஆம் தேதி ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் கீழ் தனது நடவடிக்களை நிறுத்துவதாக இந்தியா அறிவித்தது. இது தொடர்பாக இங்கு நிறைய விஷயங்கள் கூறப்பட்டன. எல்லைக்கு அப்பால் இருந்து பரப்பப்பட்ட அதே பிரச்சாரம் இதுதான். மே 9 ஆம் தேதி இரவு, அமெரிக்க துணை ஜனாதிபதி என்னுடன் பேச முயன்றார். அவர் ஒரு மணி நேரம் முயற்சித்தார். ஆனால் நான் எனது ராணுவத்துடனான சந்திப்பில் இருந்ததால் அவரது அழைப்பை என்னால் எடுக்க முடியவில்லை. பின்னர், நான் அவரை திரும்ப அழைத்தேன். பாகிஸ்தான் ஒரு பெரிய தாக்குதலை நடத்தப் போகிறது என்று அமெரிக்க துணை ஜனாதிபதி தொலைபேசியில் என்னிடம் கூறினார்.  பாகிஸ்தானுக்கு இந்த நோக்கம் இருந்தால், அது அவர்களுக்கு நிறைய இழப்பை ஏற்படுத்தும் என்பதே எனது பதில். பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால், நாங்கள் ஒரு பெரிய தாக்குதலை நடத்துவதன் மூலம் பதிலடி கொடுப்போம். இதுதான் எனது பதில். முதல் நாளிலிருந்தே எங்கள் நடவடிக்கை தீவிரமடையவில்லை என்று நாங்கள் கூறி வந்தோம். உலகில் எந்தத் தலைவரும் ஆபரேஷன் சிந்தூரைத் நிறுத்தச் சொல்லவில்லை” என்று கூறினார்.

Advertisment

டிரம்ப்பின் பெயரை உச்சரிக்காமலே யாரும் இந்த போரை நிறுத்தவில்லை என்று பிரதமர் மோடி நேற்று மக்களவையில் பேசிய நிலையில், தான் வேண்டுகோள் விடுத்ததால்தான் இந்தியா தாக்குதலை நிறுத்தியுள்ளது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று மீண்டும் பேசி பரபரப்பை கிளப்பியுள்ளார். செய்தியாளரைச் சந்தித்துப் பேசிய டிரம்ப்பிடம், இந்தியா 20-25% வரை அதிக வரிகளை செலுத்தப் போகிறதா? என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த டிரம்ப், “ஆம், நான் அப்படித்தான் நினைக்கிறேன். இந்தியா எனது நண்பர். எனது வேண்டுகோளின் பேரில் அவர்கள் பாகிஸ்தானுடனான போரை முடிவுக்குக் கொண்டுவந்தனர். இந்தியாவுடனான ஒப்பந்தம் இறுதி செய்யப்படவில்லை. இந்தியா ஒரு நல்ல நண்பராக இருந்து வருகிறது. ஆனால், அடிப்படையில் மற்ற நாடுகளை விட இந்தியா அதிக வரிகளை விதிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.