Prime Minister Modi requests the opposition parties on rajya sabha
நடைபெற்று வரும் நாடாளுமன்ற பட்ஜெட் தொடரில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் கடந்த சில தினங்களாக நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தின் போது சீன ஊடுறுவல் தொடர்பான நாட்டின் பாதுகாப்பு குறித்தும் அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் குறித்தும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்பட எதிர்க்கட்சி எம்.பிக்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் இது குறித்து பேசுவதற்கு அனுமதி கொடுக்கப்படாத காரணத்தினால் எதிர்க்கட்சி எம்.பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், இரு அவையும் பல முறை ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.
இந்த சூழ்நிலையில், குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை உரையாற்ற இருந்தார். ஆனால், எதிர்க்கட்சி எம்.பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். குறிப்பாக, எதிர்க்கட்சியைச் சேர்ந்த பெண் எம்பிக்கள் இருக்கையிலிருந்து எழுந்து அவையின் மையப்பகுதிக்கு வந்தனர். பின்னர், அவர்கள் பிரதமரின் இருக்கையை நோக்கி திரளாகச் சென்றனர். இந்த சம்பவத்தால் மக்களவையில் சிறிது நேரம் அவையில் பதற்றமான சூழல் நிலவியது. அதனால், அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதனால், மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற முடியாத நிலை ஏற்பட்டது. மேலும், மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பிரதமர் மோடி பதிலளிக்காமலேயே குரல் வாக்கெடுப்பின் மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இருப்பினும், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பிரதமர் மோடி மக்களவையில் இன்று (05.02.2026) மாலை 5 மணியளவில் உரையாற்ற இருந்தார். ஆனால், பிரதமர் மோடி இன்று வராமல் தவிர்த்துள்ளார். இதனிடையே, பிரதமர் மோடியை தாக்க எதிர்க்கட்சிகள் சதி நடப்பதால் அவர் மக்களவைக்கு வரவில்லை என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மக்களவையில் சில பெண் உறுப்பினர்களின் நடத்தை முன்னெப்போதும் இல்லாத வகையில் இருந்ததாகவும், பிரதமர் மோடியை தாக்க எதிர்க்கட்சிகள் சதி செய்ததால், அவரை அவைக்கு வர வேண்டாம் தான் தான் கூறியதாக சபாநாயகர் ஓம் பிர்லா குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். எதிர்க்கட்சி பெண் எம்.பிக்கள் பிரதமர் மோடியை முற்றுகையிட்டு தாக்க திட்டமிட்டிருப்பதாக சபாநாயகர் ஓம் பிர்லா குற்றம் சாட்டியிருப்பது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், பிரதமர் மோடி இன்று மாலை மாநிலங்களவைக்கு வருகை தந்து, குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது உரையாற்ற தொடங்கினார். அப்போது எதிர்க்கட்சி எம்.பிக்கள் கூச்சலிட்டு அமளியில் ஈடுபட்டனர். அப்போது, பிரதமர் மோடி, “நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் அமைதி காக்க வேண்டும், என்னை பேச அனுமதிக்க வேண்டும்” என எதிர்க்கட்சி எம்பிக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.அதற்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் “ராகுல் காந்தியை பேச அனுமதியுங்கள்” என முழக்கமிட்டனர். ஆனாலும் பிரதமர் மோடி தொடர்ந்து பேசிக் கொண்டிருந்ததால், மாநிலங்களவையில் இருந்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எம்.பிக்கள் வெளிநடப்பு செய்தனர். எதிர்க்கட்சிகள் அமளியால் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது மக்களவையில் நேற்று பிரதமர் பேசாத நிலையில் இன்று மாநிலங்களவையில் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow Us