கோவையில் நடைபெற்ற தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று (19-11-25) கோவை வந்தார். அதன் பின்னர், கொடிசியா வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இயற்கை வேளாண் கூட்டமைப்பு கண்காட்சியை அவர் தொடங்கி வைத்தார்.

Advertisment

அதன் தொடர்ச்சியாக இயற்கை வேளாண் கூட்டமைப்பு மாநாட்டை அவர் தொடங்கி வைத்தார். இதையடுத்து நாடு முழுவதும் உள்ள 9 கோடி விவசாயிகளுக்கு ரூ.18,000 கோடிக்கும் அதிகமான தொகையை, பி.எம். கிஷான் (PM-KISAN) திட்டத்தின் 21வது தவணையைப் பிரதமர் மோடி வெளியிட்டார்.

Advertisment

இந்த நிகழ்வில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “இயற்கை விவசாயம் என்பது எனது இதயத்திற்கு மிகவும் நெருக்கமானது. வேளாண் ஏற்றுமதி இரட்டிப்பு வளர்ச்சியை எட்டியுள்ளது. விவசாயிகள் கடன் அட்டை மூலம் ரூ.10,000 கோடிக்கும் அதிகமான உதவி செய்யப்பட்டிருக்கிறது. கடந்த 11 ஆண்டுகளில் நாட்டின் ஒட்டுமொத்த வேளான் துறையிலும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. விவசாயிகளுக்கு தற்போது வரை ரூ.4 லட்சம் கோடி உதவி செய்யப்பட்டுள்ளது. நாட்டின் அனைத்து மூலைகளில் இருக்கும் விவசாயிகளுக்கு ரூ.18,000 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள விவசாயிகளின் வங்கிக் கணக்கிலும் பணம் செலுத்தப்பட்டுள்ளது. இயற்கை வேளாண்மை பாதையில் நாம் முன்னேற வேண்டும் என்பதே அத்தியாவசிய தேவையாக உள்ளது. இயற்கை விவசாயத்திற்கு நிறைய உதவிகளை மத்திய அரசு செய்து வருகிறது.

இயற்கை வேளாண்மையில் சிறுதானியங்கள் பயிரிடுவதையும் நாம் இணைக்க வேண்டும். நம்முடைய முருக பெருமாளுக்கு தேனும், திணை மாவும் நாம் படைக்கின்றோம். கேரளா, கர்நாடகாவிலும் சிறுதானியங்கள் தான் இறைவனுக்கு படைக்கப்படுகின்றன. பல தலைமுறைகளாக நமது உணவு பழக்கம் நம்முடன் ஒன்று கலந்தவை. பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கு இயற்கை விவசாயம் தேவையானது. தமிழகத்தில் 35,000 ஹெக்டேர் நிலத்தில் இயற்கை விவசாயம் செய்யப்படுகிறது. நமது சூப்பர் உணவு உலகளாவிய சந்தைகளை சென்று சேர வேண்டும். கேரளா, கர்நாடகத்தின் மலைப் பகுதிகளில் பல்லடுக்கு வேளாண்மையை நாம் பார்க்கலாம்.

Advertisment

விவசாயத்தின் வாழும் பல்கலைக்கழகமாக தென்னிந்தியா உள்ளது. உலகின் மிகப் பழமையான அணைகள் தென்னிந்தியாவில் தான் உள்ளன. ஊடுபயிர் சாகுபடி மாதிரியை நாடு முழுவதும் கொண்டு செல்ல வேண்டும். நாடு முழுவதும் ஊடுபயிர் சாகுபடியை விரிவாக்கம் செய்வது குறித்து ஆலோசிக்க வேண்டும். நீர் மேலாண்மையில் தமிழ்நாடு வழிகாட்டியாக உள்ளது. இயற்கை வேளாண்மைக்கான தலைமையும் தென்னிந்தியா தான் என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை. இயற்கை விவசாயத்தை அறிவியல் சார்ந்த ஒரு இயக்கமாக மாற்ற வேண்டும். இயற்கை வேளாண்மையை பாடத் திட்டத்தில் இடம்பெறச் செய்ய வேண்டும்” என்று கூறினார்.