Prime Minister Modi meets EPS in Trichy Photograph: (கோப்புக்காட்சி)
கங்கைகொண்ட சோழபுரத்தில் நாளை(27/07/2025) நடைபெற உள்ள ஆடித் திருவாதிரை திருவிழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார். இதற்காக இன்று (26/07/2025) மாலத்தீவில் இருந்து தூத்துக்குடிக்கு பிரதமர் மோடி வந்தார். அவருக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் தங்கம் தென்னரசு, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் பிரதமர் மோடியை வரவேற்றனர். அதன் பிறகு தொண்டர்கள் ஆரவாரம் செய்ய தூத்துக்குடியில் விரிவாக்கப்பட்ட விமான நிலைய முனையத்தை துவக்கி வைக்கும் நிகழ்வில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
மேடையில் பிரதமர் மோடி பேசுகையில், ''தமிழ்நாட்டில் 77 ரயில் நிலையங்கள் புத்தகம் பெற்றுள்ளன. 2,500 கோடி ரூபாய் மதிப்பில் இரு புதிய சாலை கட்டமைப்புகளை திறந்து வைத்துள்ளோம். புதிய சாலைகள் மூலம் தூத்துக்குடி துறைமுகம் மேலும் வளர்ச்சி அடையும். சென்னையையும் டெல்டா பகுதிகளையும் இணைக்கும் வகையில் சாலை திட்டங்கள் இருக்கின்றன. தற்சார்பு இந்தியாவில் உயிர்நாடியாக இந்திய ரயில்வே துறை உள்ளது. இங்கிலாந்து உடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இந்தியாவின் பொருளாதாரத்திற்கு புதிய உத்தியோகம் அளிக்கிறது.
10 ஆண்டுகளில் தமிழகத்திற்கு மூன்று லட்சம் கோடி கொடுத்துள்ளோம். இந்தத் தொகை கடந்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சி காலத்தில் கொடுக்கப்பட்ட தொகையை உடன் ஒப்பீடு செய்யும் பொழுது மூன்று மடங்கு அதிகமானது. இந்த 11 ஆண்டுகளில் தமிழ்நாட்டுக்கு பதினோரு புதிய மருத்துவக் கல்லூரிகள் கொடுத்துள்ளோம். முதன்முறையாக கரையோர பகுதிகளில் மீன்பிடி துறையோடு தொடர்புடைய சமூகங்களுக்கு எந்த ஒரு அரசும் இத்தனை கரிசனத்தையும் அக்கறையையும் வெளிப்படுத்தியதே இல்லை. நீலப் புரட்சி வாயிலாக நாங்கள் கரையோர பொருளாதாரத்திற்கு விரிவாக்கம் அளித்து வருகிறோம்'' என்றார்.
தூத்துக்குடி நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி திருச்சி புறப்பட்டார். திருச்சி விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் தனியார் விடுதிக்கு சென்ற நிலையில் முன்னதாகவே அங்கு வந்திருந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியை சந்தித்தார். சந்திப்பிற்கு பிறகு மீண்டும் எடப்பாடி பழனிசாமி சேலம் திரும்பினார்.