தென்னிந்திய இயற்கை விவசாயிகள் வேளாண் கூட்டமைப்பு சார்பில் இயற்கை விவசாயத்தை வலியுறுத்தியும், அதற்கான தொழில்நுட்பம் குறித்த விவசாய மாநாடு கோவை கொடிசியா வளாகத்தில் இன்று (19.11.2025) தொடங்க உள்ளது. மொத்தம் 3 நாட்கள் இந்த மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளார். இதற்காக இன்று நண்பகல் 12:30 மணிக்கு ஆந்திரா மாநிலம் புட்டபர்த்தியில் இருந்து தனி விமானத்தில் புறப்படும் பிரதமர் மோடி பிற்பகல் 01:25 மணி அளவில் கோவை விமான நிலையத்திற்கு வந்தடைகிறார்.
அங்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, தமாக தலைவர் ஜி.கே. வாசன் உள்ளிட்டோர் சார்பில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர். விமான நிலையத்தில் இருந்து காரில் பயணித்து கொடிசியா வளாகத்தில் உள்ள மாநாட்டில் பங்கேற்க உள்ளார். இந்த மாநாட்டில் சிறந்த இயற்கை விவசாயிகள் 18 பேருக்கு விருதுகளை வழங்க உள்ளார். அதோடு பிரதமரின் விவசாயிகள் நலநிதி திட்டத்தின் (பிரதமர் கிசான் திட்டம்) கீழ் நாடு முழுவதும் உள்ள சுமார் 9 கோடி விவசாயிகளுக்கான 21வது தவணை நிதியாக 18 ஆயிரம் கோடி ரூபாயை விடுவிக்க உள்ளார்.
அதனைத் தொடர்ந்து மாலை 03:15 மணிக்கு கொடிசியாவில் இருந்து புறப்பட்டு 3:30 மணிக்கு விமான நிலையம் செல்கிறார். டெல்லிக்குப் புறப்படும் முன்பு, எடப்பாடி பழனிச்சாமி, ஜி.கே. வாசன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. பிரதமர் மோடியின் வருகையை ஒட்டி கோவை மாநகரில் இன்று போக்குவரத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
Follow Us