தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாம் ஆகிய 4 மாநிலங்களுக்கும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கும் இந்த ஆண்டின் ஏப்ரல், மே மாதங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற உள்ளது. இந்த தேர்தல்களை எதிர்கொள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள அரசியல் கட்சிகள், கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதன்படி, திமுக தலைமையிலான கூட்டணியில், விடுதலை சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளனர். 

Advertisment

அதே போல் அதிமுக - பா.ஜ.க அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணியில் டிடிவி தினகரனின் அமமுக, அன்புமணி தரப்பு பா.ம.க, த.மா.க, ஐஜேகே, தமமுக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. சீமானின் நாம் தமிழர் கட்சி, கடந்த தேர்தல்களைப் போலவே 234 தொகுதிகளிலும் கூட்டணி வைக்காமல் தனித்தே போட்டியிடுகிறது. அதே போல் விஜய்யின் தவெகவும் தனித்துப் போட்டியிட உள்ளதாகக் கூறப்படுகிறது. இது தவிர தேமுதிக, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு, ராமதாஸ் தரப்பு பாமக ஆகிய கட்சிகள் கூட்டணி முடிவுகளை அறிவிக்காமல் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன.

Advertisment

இத்தகைய சூழலில் தாம் செங்கல்பட்டு மாவட்டம் மதுராங்கத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பரப்புரை கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 23ஆம் தேதி (23.01.2026) நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் பிரதமர் மோடி வரும் 28ஆம் தேதி மோடி மதுரைக்கு வருகைத் தர உள்ளார். அங்கு நடைபெற உள்ள தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்க உள்ளார். அதற்கு முன்னதாக பிரதமர் மோடி, திருப்பரங்குன்றம் கோவிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

nda-alliance

மற்றொருபுறம் புதுச்சேரியில் வரும் 11ஆம் தேதி தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மாபெரும் மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ளார். லாஸ்பேட்டையின் விமான நிலைய மைதானத்தில் நடைபெறும் இந்த மாநாட்டில், ஆளும் என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவரும், புதுச்சேரி முதல்வருமான ரங்கசாமி பங்கேற்கவுள்ளார். இந்த மாநாட்டில் புதுச்சேரியில் புதிதாக கட்சி ஆரம்பித்துள்ள லாட்டரி தொழிலதிபர் மார்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டினின் லட்சிய ஜனநாயகக் கட்சியும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையவுள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Advertisment