உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ரூ. 2,000 கோடி மதிப்பில் மிகப் பிரம்மாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டது. அதாவது இக்கோவிலுக்காக ஒதுக்கப்பட்ட 70 ஏக்கர் நிலத்தில் 2.7 ஏக்கர் நிலத்தில் முதற்கட்ட பணிகள் மூலம் ராமர் கோவில் கட்டப்பட்டது. இதனையடுத்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கடந்த கடந்தாண்டு (2024) ராமர் கோவில் திறப்பு விழா நடைபெற்றது. அப்போது நடைபெற்ற சிறப்புப் பூஜைக்குப் பின்பு, குழந்தை ராமர் சிலை கண் திறக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பொதுமக்கள், பக்தர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் ராமரை வழிபாடு செய்து வருகின்றனர். இதற்கிடையே மீதமுள்ள பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் அயோத்தி ராமர் கோயில் கட்டுமானம் பணி முடிந்ததன் அடையாளமாகப் பிரதமர் மோடி 161 அடி உயரமுள்ள பிரதான கோபுரத்தின் உச்சியில் இன்று (25.11.2025) கொடியேற்றினார். இதனை ஒட்டி இன்று சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன. 22 அடி நீளம், 11 அடி அகலத்தில் தயாரிக்கப்பட்ட சிறப்பு கொடி 191 அடி உயரத்தில் ஏற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் ஆளுநர் ஆனந்தி பெண் படேல் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
மேலும் ராமர் கோயிலுக்கான டிரஸ்ட் குறித்தும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொடியேற்றத்தைத் தொடர்ந்து பிரதமர் மோடி பேசுகையில், “முழு இந்தியாவும் உலகமும் இன்று ராமர் மயமாகி உள்ளது. ஒவ்வொரு ராம பக்தரின் இதயத்திலும் அளவற்ற திருப்தி உள்ளது. எல்லையற்ற நன்றியுணர்வு இருக்கிறது. அளவிட முடியாத இயற்கைக்கு அப்பாற்பட்ட பேரின்பம் இருக்கிறது. பல நூற்றாண்டுகளின் காயங்கள் குணமாகி வருகின்றன. பல நூற்றாண்டுகளின் வலி இன்று ஓய்வெடுக்கிறது. பல நூற்றாண்டுகளின் உறுதிப்பாடு இன்று நிறைவேறுகிறது. 500 ஆண்டுகளாக எரிந்து கொண்டிருந்த அந்த நெருப்பின் தியாகம் இன்று நிறைவுபெறுகிறது” என்ப் பேசினார்.
Follow Us